வீடியோவை அப்போலோ தலைவர் மறுத்ததாக கேள்விப்படுகிறேன்!: தமிழிசை

“ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ குறித்து அப்போலோ மருத்துவமனை தலைவர் மறுத்ததாக கேள்விப்படுகிறேன்” என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் காட்சி என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திர்ராஜன், “ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதே மோசமான உடல் நிலையில் இருந்தார் என்று அப்போலோ மருத்துவமனை தலைவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் ஜெயலலிதா ஓரளவு நலமுடன் இருப்பதாக இன்று வெளியிடப்பட்ட காட்சியில் இருக்கறது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு எத்தனை நாள் கழித்து இந்த வீடியோ எடுக்கப்பட்டது?

இந்த அளவுக்கு உடல் நிலை தேறிய ஜெயலலிதா இறந்துவிட்டார். இந்த காட்சி எடுக்கப்பட்ட எத்தனை நாள் கழித்து அவரது உடல் நிலை மோசமானது?” என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “இந்த வீடியோ தங்களது மருத்துமனையில் எடுக்கப்பட்டது அல்ல என்று அப்போலோ மருத்துவமனை தலைவர் மறுத்தருப்பதாக கேள்விப்படுகிறேன்” என்றும் தமிழிசை தெரிவித்தார்.