ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்: அற்புதம்மாள் நம்பிக்கை

--

சென்னை:

ராஜீவ்கொலை வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளை விடுவிக்க  வேண்டும் என ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியதாகவும், அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நம்புவதாகவும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறி உள்ளார்.

ராஜீவ்கொலை வழக்கு கைதிகளை விடுதலை சம்பந்தமாக தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு ஆளுநர் மாளிகையின் ஒப்புத லுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் சட்டச்சிக்கல் இருப்பதாக கூறி ஆளுநர் மாளிகை தாமதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், பேரறிவாளனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

அதைத்தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த  அற்புதம்மாள் கூறியதாவது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட  7 பேரை விடுவிக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்தேன்.  வழக்கில் பல குளறுபடிகள் இருப்பதாக, தீர்ப்பளித்த நீதிபதி தாமஸ் கூறிய கருத்து, படுகொலை குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் எழுதிய புத்தகம், பேரறிவாளனின் வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவிடவில்லை என CBI முன்னாள் அதிகாரி தியாகராஜன் கூறிய வீடியோ குறுந்தகடு என பல தகவல் கோப்புகளும் இந்த கோப்புகளுடன் இணைத்து கொடுத்துள்ளதாக கூறினார்.

நான் பேசியதை மொழிபெயர்ப்பாளர் ஆளுநரிடம் விவரித்தார். ஆளுநர் அதை கவனமுடன் கேட்டறிந்தார். இந்த விஷயத்தில்  விரைவில் நடவடிக்கை இருப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். ஆளுநரை சந்தித்த பின் எனக்கு நம்பிக்கை வந்துள்ளது. அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன் என்றார்.

மேலும், 7 பேர் விடுதலையில் இழப்பீட்டை எதிர்பார்த்து தான் எதிர்ப்பு கிளம்புகிறது. உயிருடன் சித்ரவதை அனுபவிக்கும் எனக்கும் என் மகனுக்கு என்ன இழப்பீடு வழங்கப்படும்?” என அற்புதம்மாள் என கேள்வி எழுப்பினார்.