பாலியல் புகார் கூறியதால் பழி வாங்கும் திரை உலகம் : ஸ்ருதி ஹரிஹரன்

பெங்களூரு

தான் பாலியல் புகார் அளித்ததால் தனக்கு திரை உலகம் வாய்ப்பளிக்கவில்லை என நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகை ஆவார். இவர் நடிகர் அர்ஜுனுடன் நிபுணன் என்னும் தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாரான படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் நடிக்கும் போது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக #மீடூ வில் பதிந்தார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சை ஆனது.

நடிகர் அர்ஜுன் இது தவறான புகார் என ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். நடிகை ஸ்ருதி ஹரிஹரனும் நடிகர் அர்ஜுன் மீது வழக்கு தொடர்ந்தார். தற்போது இரு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த புகாரை ஒட்டி அவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து நடிகை ஸ்ருதி ஹரிஹரன், “எனக்கு முன்பு வாரத்துக்கு இரு பட வாய்ப்புகள் வரும். ஆனால் நான் மீடூ புகார் அளித்த பிறகு என்னை தங்க்ள் படத்துக்கு ஒப்பந்தம் செய்ய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் எனக்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைந்துள்ளது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்தும் என்ன நீக்கி வருகின்றனர்.

பாலியல் புகார் அளித்ததால் நான் பழிவாங்கப்பட்டுள்ளேன். இந்த நிலை கன்னட திரை உலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரை உலகம் எங்கும் உள்ளது. நான் இதற்கு சிறிது கவலைப்படுகிறேனே தவிர சோர்ந்து விடவில்லை. நான் இன்னும் திரைப்படத்துறையில் நீடிப்பதற்கு எனது நேர்மை மட்டுமே காரணம். நான் தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடுவேன்” என தெரிவித்துள்ளார்.