திருமாவளவனுக்கு கடன் வாங்கி ஐம்பது லட்ச ரூபாய் கொடுத்தேன்!: வைகோ அதிரடி

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு கடன் வாங்கி ஐம்பது லட்ச ரூபாய் கொடுத்ததாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர்  வைகோ தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வைகோ பேட்டி அளித்தார். அப்போது, “திராவிட கட்சிகள் ஆட்சியில்  தலித்துகளுக்கு உரிய  முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று ஒரு விமர்சனத்தை சிலர் முன்வைக்கிறார்களே” என்று கேட்கப்பட்டது.

இதையடுத்து திராவிட ஆட்சியில் தலித் மக்கள் பெற்ற உரிமைகள் குறித்து வைகோ ஆவேசமாக பட்டியலிட்டார். மேலும், இக்கேள்வி தன்னைக் குறிப்ப்பிட்டு தனிப்பட்ட முறையில் கேட்பதாக நினைத்துக்கொண்டு, “என் வீட்டில் தலித் மக்கள்தான் வேலை செய்கிறார்கள். அவர்களுடன் சரிசமமாகத்தான் பழகுகிறேன்” என்றார். பிறகும் மனம் ஆறாத வைகோ, மைக்கை கழற்றி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் வன்னியரசு, “வைகோ ஒரு மேலாதிக்க ஆணவம் மேலோங்கிய தலித் விரோதி போல் தோன்றுகிறார்” என்று கருத்துத் தெரிவித்தார்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வைகோ இது குறித்து பேசினார்.

அப்போது அவர், “நான் ஆபத்தானவன் என்பதை வன்னியரசு கூட்டம் புரிந்துகொள்ள வேண்டும். தூரத்தில் இருந்தால் இந்த நெருப்பு குளிரைப் போக்கும்.  உரசிப்பார்த்தால் இந்த நெருப்பு தீப்பிடிக்கும்.

(வன்னியரசு எழுதியதைப் படித்தவுடன்) இரவெல்லாம்  எனக்குத் தூக்கம் இல்லை.

நான் அன்னக்காவடி. என் தாத்தா பெரிய வீட்டைக் கட்டிவைத்துவிட்டுப் போய்விட்டார். ஆனால் வீட்டிற்கு வெள்ளையடிக்கக்கூட என்னிடம் பணம் இல்லை.

என் கை சுத்தமாக இருக்கிறது. (கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகளைச் சுட்டிக்காட்டி) அதனால்தான் இத்தனை பேர் என்னுடர் இருக்கிறீர்கள்.

மனம் மிகவும் நொந்துவிட்டது. அதனால்தான் இதையெல்லாம் பேசுகிறேன்.

2006ம் ஆண்டு,  ஜெயலலிதா  தலைமையிலான கூட்டணியில விடுதலை சிறுத்தைகளும் இடம் பெற்றிருந்தது.  அப்போது திருமாவளவன் தேர்தல் செலவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று என்னிடம் கேட்டார்.  கலிங்கப்பட்டிக்கு வந்துவிட்டுச் செல்லுங்கள் என்றேன். வந்தார்.

என் வீட்டில் என் அப்பாவின் அறைக்குள் அவரை அழைத்துச் சென்று முப்பது லட்ச ரூபாய் கொடுத்தேன்.

மறுபடி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு போன் செய்து, பூத் செலவுக்கே பணம் இல்லை என்றார்.  இரண்டு இரண்டு லட்சமாக பத்து பேரிடம் கடன் வாங்கி இருபது லட்ச ரூபாய் கொடுத்தேன். இதையெல்லாம் யாரிடமும் சொன்னது கிடையாது.

மனசு நொந்து எரிந்துகொண்டிருப்பதால் இதைச் சொல்கிறேன்” என்று வைகோ பேசினார்.

#Iloan #Thirumavalavan #fifty #lakh #rupees #Vaiko

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: I made a loan to Thirumavalavan and gave him fifty lakh rupees !: Vaiko, திருமாவளவனுக்கு கடன் வாங்கி ஐம்பது லட்ச ரூபாய் கொடுத்தேன்!: வைகோ அதிரடி
-=-