அரசியலுக்கு வரவேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை: மன் கீ பாதில் மனம் திறந்த பிரதமர் மோடி

சென்னை: அரசியலுக்கு வர வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை, ஆனால் இப்பொழுது அதில் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு மாதமும் மன் கீ பாத் என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுவார். இந்த மாதத்தின் ஞாயிற்றுக்கிழமையான இன்று தேசிய மாணவர் தினம்.

ஆகையால், தேசிய மாணவர் படை மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: பள்ளி நாட்களில் என்சிசியில் இருந்த போது ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை என்றார்.

மாணவர்களில் ஒருவர் அரசியல்வாதியாக இல்லாமல் இருந்தால் தாங்கள் என்னவாகி இருப்பீர்கள் என்று கேள்வி கேட்கிறார். தொடர்ந்து பிரதமர் மோடி அதற்கு பதில் அளித்து பேசியதாவது:

இது மிகவும் கடினமான கேள்வி. வாழ்க்கையில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு கட்டங்களை சந்திக்க வேண்டும். இப்படி ஆக வேண்டும், அப்படி ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையை சொல்லுகிறேன்.

நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஒருபோதும் விரும்பியது இல்லை. நாட்டின் முன்னேற்றத்துக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று தான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

அரசியலில் இல்லாமல் வேறு எங்கேனும் இருந்தாலும், முழு மனதுடன், மனப்பூர்வமாக நாட்டுக்காக ஏதேனும் செய்து கொண்டிருப்பேன் என்றார். தொலைக்காட்சி பார்க்க நேரம் இருக்கிறதா என்று மற்றொரு மாணவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, பொதுவாக நான் புத்தகங்கள் படிப்பது உண்டு. ஆனால் இப்போது கூகுள் வந்துவிட்டதால், படிக்கும் வழக்கம் போய்விட்டது. என்சிசியில் இருக்கும் போது மிகுந்த ஒழுக்கமான மாணவன் என்று பெயர் எடுத்தவன்.

ஒரு முறை, மரத்தில் ஏறி பறவை ஒன்றை காப்பாற்ற சென்றேன். ஆனால், நான் அங்கே தொங்கி கொண்டிருந்த பட்டத்துக்காக செல்கிறேன் என்று எல்லாரும் தவறாக நினைத்தார்கள். உண்மை அறிந்து பிறகு என்னை பாராட்டினார்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பாதுகாப்பு படையின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.

You may have missed