லண்டன்: உலகக்கோப்‍பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்தின் ஓவர் த்ரோவால், இங்கிலாந்து அணிக்கு 5 ரன்களுக்கு பதிலாக, 6 ரன்களை கொடுத்த இலங்கையைச் சேர்ந்த நடுவர் குமார் தர்மசேனா, அந்த முடிவுக்காக தான் வருந்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அவர் ஏற்கனவே விமர்சனத்திற்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் மீறித்தான் அவர் இறுதிப் போட்டிக்கு நடுவராக நியமிக்கப்பட்டார். ஆனால், அதிலும் தவறு செய்துவிட்டார். அவர் செய்த தவறால், கோப்பை வெல்ல வேண்டிய நியூசிலாந்து, இங்கிலாந்திடம் அதை பறிகொடுத்துவிட்டது.

தர்மசேனா கூறியுள்ளதாவது, “தொலைக்காட்சியில் போட்டியைப் பார்ப்பவர்களுக்கு எதையும் எளிதாக கண்டுபிடிக்க முடியும். நானும் தொலைக்காட்சியில் பார்த்தபோதுதான், 6 ரன்கள் கொடுத்ததை தவறு என்று கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால், மைதானத்தில் அதுபோன்ற வசதிகள் இல்லை.

எனவே, எனது முடிவிற்காக நான் எப்போதும் வருந்தவில்லை. அந்தச் சூழலில் நான் மேற்கொண்ட முடிவுக்காக, ஐசிசி என்னைப் பாராட்டியது” என்று தெரிவித்துள்ளார் அவர்.

ஆனால், இவரின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. மூன்றாவது நடுவர் மற்றும் ஏராளமான வசதிகளை ஏன் பயன்படுத்தவில்லை என்றும், கோப்பையை ஒரு அணியிடமிருந்து பறித்து, இன்னொரு அணிக்கு கொடுத்துவிட்டார் என்றும், கொடூரமான நடுவர் என்றும் பல்வேறான விமர்சனங்களை சந்தித்து வருகிறார் தர்மசேனா.