முகக்கவசம் அணியமாட்டேன் என நேற்று உதார்விட்ட பாஜக அமைச்சர்… இன்று மன்னிப்பு கோரிய பரிதாபம்..

பாட்னா: பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்துவரும் மத்திய பிரதேசத்தில், உள்துறை அமைச்சராக இருப்பவர் நரோட்டம் மிஸ்ரா. இவர் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, தான் ஒருபோதும் பொதுநிகர்ச்சிகளில் முகக்கவசம் அணியமாட்டேன் என வாய்சவாடால் விட்டார்.  ஆனால், அவரது கருத்துக்கு பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தனது கருத்துக்கு இன்று மன்னிப்பு கோரியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில், சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பாரதியஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு உள்துறை அமைச்சராக இருப்பவர் நரோட்டம் மிஸ்ரா. இவர் நேற்று  இந்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முககவசம் இன்றி பங்கேற்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்க, “தான் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும்  முகக்கவசம் அணிவதில்லை” அதனால் என்ன?“ என்று  எதிர் கேள்வி எழுப்பினார். அவரது   பேச்சின் வீடியோ சமூக ஊடகங்களில்  வைரல் ஆனது.

இதையடுத்து, மிஸ்ராவின் பேச்சுக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடியே, அனைவரும் கண்டிப்பாக முக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், பாஜக அமைச்சரே முகக்கவசம் அணி மாட்டேன் என்று கூறியது, பாஜகவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாஜக தலைமையும் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார் அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா.  அவர் கொடுத்துள்ள விளக்கத்தில்,  முகக்கவசம் (Face Mask) அணிவது குறித்த தனது கருத்து,  ‘சட்டத்தை மீறுவதாகத் தோன்றியது’ என்றும், தனது கருத்து,  இது பிரதமரின் உணர்வுக்கு ஏற்ப இல்லை. நான் செய்த தவறை ஏற்றுக்கொண்டு வருத்தத்தை தெரிவிக்கிறேன். இனி நான் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிவேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியை கடைபிடிக்குமாறு நான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்  என்று கூறியுள்ளார்.

மேலும், தான் பாலிபஸால் நோயினால்,  அவதிப்படுவதால் நீண்ட நேரம் அதை அணிந்து கொள்வது மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது என்றும் தெரிவித்து உள்ளார்.