எனது மகன் செய்கைகளை நான் எதிர்க்கிறேன் : யஷ்வந்த் சின்ஹா
டில்லி
கொலை குற்றம் சாட்டியவர்கள் மாலை அணிவிப்பதை அனுமதித்த தனது அமைச்சர் மகனின் செய்கையை எதிர்ப்பதாக யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு மாமிச வியாபாரி ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் 11 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் அந்த குற்றவாளிகளில் ஒருவர் மத்திய சிவில் விமானத்துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு மாலை அலிக்கும் புகைப்படம் வெளியாகியது.
இதற்கு பாஜக அமைச்சரின் தந்தையும் முன்னாள் பாஜக அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டரில், ”நான் எனது மகனை கண்டிக்க முடியாத ஒரு தந்தையாக உள்ளேன். தற்போது காலம் மாறி விட்டது. நான் எனது மகனின் செய்கைகளை எதிர்க்கிறேன். அமைச்சரின் இத்தகைய செய்கையால் அதிருப்தி அதிகமாகும். என்றும் வெற்றி பெற முடியாது” என பதிந்துள்ளர்.
இதற்கு ஜெயந்த் சின்ஹா தனது டிவிட்டரில், “எனக்கு சட்டம் மற்றும் நீதியின் மீது நம்பிக்கை உள்ளது. துரதிருஷ்டவசமாக என் செய்கைகள் மீது தேவையற்ற அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. நான் சட்டத்தை மதிக்கிறேன். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட்டு நிரபராதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என பதிந்துள்ளார்.
அமைச்சர் தனது மற்றொரு டிவிட்டர் பதிவில், “இந்த வழக்கில் ராஞ்சி உயர்நீதிமன்றம் மேல் முறையீட்டை ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதியதாக விசாரணை தொடங்கி தீர்ப்பு அளிக்கும் வரை அவர்களை குற்றவாளிகள் என சொல்வது தவறு” என பதிந்துள்ளார்.