தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறும் என ஐ-பேக் ரிப்போர்ட்! மகிழ்ச்சியில் ஸ்டாலின்…

சென்னை:  தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுகவின் வெற்றிக்கு ஐடியா கொடுத்து வந்த பிரபல நிறுவனமான,   பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறுவனம், தேர்தல் முடிவு குறித்து, திமுகவுக்கு சாதனமாக அறிக்கையை கொடுத்துள்ளதாம். இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக முன்னணியினர் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர் என அறிவாலயம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.  இதற்கிடையில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகன் மருமகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சகிதம், ஐபேக் நிறுவனத்துக்கு வந்து ஆலோசனை செய்ததுடன், வாக்குகள் பதிவான விதம் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இதில், திமுக அமோகமாக வெற்றி பெறும் என ஐபேக் சார்பில் அறிக்கை  கொடுத்துள்ளதாம். இதனால், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திமுக தலைமை சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பதாக கூறப்படுகிறது.

நேற்று மதியம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐ-பேக் தலைமை அலுவலகத்திற்கு ஸ்டாலின், சபரீசன் உள்பட திமுக நிர்வாகிகள் திடீரென வருகை தந்தனர்., அங்கு தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பிரசாந்த் கிஷோருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் நேற்று மாலையும் ஸ்டாலின் மீண்டும் வருகை தந்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, வாக்குப்பதிவு நிலவரம் குறித்தும், முடிவு எப்படி இருக்கும் என்றும், பிரசாந்த் கிஷோர் தரப்பில் இருந்து ஸ்டாலினுக்கு அறிக்கை கொடுக்கப்பட்டு உள்ளதாம்.  அதில், திமுக 180 தொகுதிகளைத் தாண்டி திமுக அமோக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதாம்.  மேலும், அதிமுகவும் படுதோல்வி அடையும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றும், தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஸ்டாலின் உள்பட அவரது குடும்பத்தினர் மற்றும் திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இதனால், திமுக அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் என்பது குறித்து இப்போதே விவாதங்கள் எழுந்துள்தாம்.  பல திமுகவினர்,  கருணாநிதி குடும்பத்தினர் மூலம் அமைச்சரவையில் இடம்பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அதுபோல,  பல உயர் அதிகாரிகள் ஸ்டாலினுக்கு ,இப்போதே வாழ்த்து தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.