ஸ்ரீரீநகர்

தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தவீந்தர் சிங் தீவிரவாதிகளிடம் இருந்து தாம் ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.

காஷ்மீர் விமான நிலையத்தில் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் தவிந்தர் சிங்.  இவர் கடந்த சனிக்கிழமை ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டரான சயீத் நவீத் முஷ்தக்குடன் ஜம்முவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர்கள்  ஜம்மு – காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செக் போஸ்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்தது.

டி.எஸ்.பி. தவிந்தர் சிங் ஜனாபதி கையால் வீர தீர செயல்களுக்கான விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது.   மேலும் காஷ்மீர் மாநிலத்தை ஆய்வு செய்ய  வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் 15 முக்கிய உறுப்பினர்களை இந்தியா சார்பில் வரவேற்ற குழுவில் தவிந்தர் இணைந்திருந்தார்.

சனிக்கிழமை அன்று காரில் பயணித்த முஷ்தக், சிங், ராஃபி (ஷோபியனில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கரவாத குழுவில் இணைந்தவர்) மற்றும் இர்ஃபான் ஷாஃபி (தியரூ ஷோபியன் பகுதியில் வசித்து வருகின்றவர்) ஆகியோர் குலாம் மாவட்டத்தில் உள்ள வான்போ செக் போஸ்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்

இது குறித்து  காஷ்மீர் மாநில காவல்துறை ஐ ஜி விஜய் குமார்,“கடந்த  சனிக்கிழமை ஷோஃபியனில் இருந்து ஐ10 காரில் சில முக்கிய பயங்கரவாதிகள் ஜம்மு ஸ்ரீநகர் நோக்கிப் பயணித்து வருகின்றனர் என்ற தகவல் கிடைத்தது.  இதையொட்டி தெற்கு காஷ்மீரில் இருக்கும் செக் போஸ்ட்கள் அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அந்த சோதனையில் பிடிபட்ட காரில் இரண்டு பயங்கரவாதிகள் மற்றும் டி.எஸ்.பி, வழக்கறிஞர்கள் ஆகியோர் இருந்தனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு வில் தீவிரவாதிகளுக்கு எதிராக பல்வேறு சிறப்பு ஆப்பரேசனில் பங்கேற்றவர் தவிந்தர் சிங் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். ஆயினும் சனிக்கிழமை அவர் மற்றவர்களுடன் பேசிய விதம் சந்தேகத்திற்கு வழி வகுத்ததால் அவரையும் கைது செய்து பயங்கரவாதியைப் போல் நடத்துகின்றோம். நீதிமன்ற காவலில் தற்போது வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்

இந்த விசாரணையின் போது காஷ்மீர் தீவிரவாதிகள் ஜம்முவில் இருந்து சண்டிகர் வழியாக டில்லிக்குச் செல்ல தாம் உதவியதாகவும் அதற்காக தமக்கு ரூ.12 லட்சம் பணம் அளிக்கப்பட்டதாகவும் தவீந்தர் சிங் ஒப்புக் கொண்டுள்ளார்.

நேற்று டி எஸ் பி தவீந்தர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  அத்துடன் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி விருது உள்ளிட்ட அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.” என்று விஜய குமார் கூறினார்.