தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை வழங்க வற்புறுத்தினேன்: தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ்

டில்லி:

மிழகத்தில் காவிரி விவகாரம், நிர்மலாதேவி பாலியல் அழைப்பு, ஸ்டெர்லைட் போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மக்கள் கொந்தளிப்பான சூழ்நிலையில் உள்ள நேரத்தில் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்றுமாலை திடீரென  டில்லி புறப்பட்டு சென்றார்.

இது பல்வேறு யூகங்களை எழுப்பிய நிலையில், அவர், தமிழக அரசுக்கு தேவையான நிதியை வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்திவே சென்றுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டில்லி சென்ற தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ், அங்கு நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து 15வது நிதிக்குழு தலைவர் கே.என். சிங்குடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் இயற்கை பேரிடர்களாலும், மழை பொய்ததாலும்  தமிழ்நாடு தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும் என கோரியதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து காவிரி விவகாரம் மற்றும் கவர்னர் பிரச்சினை குறித்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்,  “இயற்கை பேரிடர்களால் தமிழ்நாடு தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டதாக” தெரிவித்தார்.

இதுகுறித்து, தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடமும்,  தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும், அவர்  தமிழ்நாட்டிற்கு கூடுமானவரை அதிகளவு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.