விழுப்புரம்: எஸ்வி சேகரை சந்தித்தது உண்மைதான் என்றும் அவரை காவல்துறைதான் கைது செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெண் பத்திரிக்கையாளர் குறித்து இழிவாக முகநூலில் பகிர்ந்த தமிழக பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் காவல்துறை நடவடிக்கைக்கு பயந்த கடந்த நான்கு  வாரங்களாக தலைமறைவாக உள்ளார். அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை கைது செய்ய தடையில்லை என தெரிவித்தது. ஆனாலும்  சரண்டர் ஆகாமல் எஸ்வி சேகர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.

தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எஸ்வி சேகரின் அண்ணன் மனைவி என்பதால் காவல்துறையினர் எஸ்வி சேகரை கைது செய்ய மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் திருப்பதியில் எஸ்.வி.சேகர் சுதந்திரமாக சுற்றித் திரிவது போன்ற படம் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைவிட அதிர்ச்சி அளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகரும் கலந்துகொண்டதும் நடந்தது.

அந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் எஸ்வி சேகரும் சந்தித்து பேசிக்கொள்ளும் வீடியோ வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்வி சேகரை பார்த்தேன். நான் தனிப்பட்ட முறையில் எஸ்.வி.சேகரை சந்திக்கவில்லை. நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு அவரும் வந்தார்.

எஸ்.வி சேகர் மீது கட்சிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைதான் கைது செய்ய வேண்டும்” என்றார்.