மோடியை நான் திட்டி இருக்கக் கூடாது : மன்மோகன் சிங்

ந்தூர்

டந்த 2014ல் தாம் மோடியை திட்டி இருக்கக் கூடாது எனவும் மக்களே உணரட்டும் என விட்டிருக்க வேண்டும் எனவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் மத்திய பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அவர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தூரில் மன்மோகன் சிங் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.


அப்போது மன்மோகன் சிங், “கடந்த 2014 ஆம் வருடம் நான் பிரதமர் மோடியை கடுமையான வார்த்தைகளால் திட்டி உள்ளேன். நான் அவ்வாறு திட்டி இருக்கக் கூடாது. மக்களே அவரைப் பற்றி உணரட்டும் என விட்டிருக்க வேண்டும். இப்போது மக்கள் அவரைப் பற்றி நன்கு உணர்ந்துள்ளனர். இனி அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள்.

பிரதமர் எதிர்க்கட்சியினரை தகாத வார்த்தைகளால் திட்டுவதை நிறுத்த வேண்டும் அது பிரதமருக்கு சரி அல்ல. ஊழலை பாஜக அரசு முன்னின்று நடத்தி வருகிறது. அதில் ரஃபேல் முதன்மையானது. பாராளுமன்ற விசாரணைக் குழு அமைத்து ரஃபேல் பேரத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை என்பதை அரசு நிரூபிக்க வேண்டும்.

அரசின் மற்றொரு தவறான பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மோடி அரசு எதையும் சாதிக்கவில்லை. அது முழுக்க முழுக்க தோல்வி அடைந்து விட்டது. மோடி அரசு குறிப்பிட்டபடி இந்த நடவடிக்கையால் கருப்புப் பணம் மீட்கப்படவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவுகள் மாற்றத் தக்கது அல்ல. இதனால் துயருற்ற மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மோடி அரசை அகற்ற வேண்டும்.

ஊழலை கண்டுபிடிக்க வேண்டிய அரசு அமைப்பின் முதலாம் மற்றும் இரண்டாம் அதிகாரிகளே ஊழலில் தொடர்புள்ளதால் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் தோல்வியை காட்டுகிறது.

அதே போல ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசுக்கு உண்டான மனத்தாங்கலும் தவறானது. தற்போது அதை களைந்து வருவதாக செய்திகள் வந்துள்ளன. அவை களையப்பட்டால் நல்லது.

பாஜக அரசின் மற்றொரு தவறு வேலை வாய்ப்பை உருவாக்காதது. மத்தியப்பிரதேசத்தில் வருடத்துக்கு 17000 வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் எம் பி ஏ, சட்டப் பட்டதாரிகள் உள்ளிட்ட 2.81 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். வேலை இல்லா திண்டாட்டத்துக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்” என் தெரிவித்துள்ளார்.