புதுக்கோட்டை,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த 15 நாட்களாக நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்,.

ஆரம்பத்தில் கிராம மக்கள் மட்டுமே பங்கேற்ற இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்தது. மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்களும் ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து அனைத்து  அரசியல் கட்சி தலைவர்களும்  நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நல கூட்டணி தலைவர்கள் திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்துகொண்டு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் திமுக செயல்தலைவர் இன்று ஹைட்ரோ கார்பன் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவிக்க  நெடுவாசல் வந்தார். அங்கு போராடி வரும் மக்களிடையே அமர்ந்து அவரும் ஆதரவு தெரிவித்தார்.

அவரை பொதுமக்கள் கிராம எல்லைக்கே வந்து வரவேற்றனர். அதையடுத்து கிராம எல்லையில் இருந்து போராட்டம் நடைபெற்று வரும் நாடியம்மன் கோவில் வரை நடந்தே சென்றார். பின்னர் தரையில் மக்களோடு மக்களாக அமர்ந்து ஆதரவு தெரிவித்தார். போராட்ட நிலவரம் குறித்து அங்குள்ள கிராம மக்களிடம் கேட்டறிந்தார். அவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. ஆனால், ஸ்டாலின்  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்களிடம் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது,

விவசாயத்தை அழிக்கும்  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி,  மத்திய அரசு அரசை எதிர்த்து  நடத்தும் இந்த போராட்டம்,  ஜல்லிக்கட்டு போராட்டம் போல் கட்டுப்பாட்டுடன், எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் வெற்றிபெறும் என்றும்,

நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டுவதாக இந்த போராட் டம் அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

மேலும், பொதுமக்கள், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தி.மு.க. ஆதரவு அளிக்காது என்றும், விவசாயிகளுக்காக பல்வேறு சலுகைகள், திட்டங்களை அறிவித்தது கலைஞர் ஆட்சியில்தான்.

இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர்தான். அதே போன்று விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கடனை தள்ளுபடி செய்ததும் தி.மு.க. அரசு தான். எனவே ஒருபோதும் விவசாயிகளை தி.மு.க. கைவிடாது என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து,  டெல்லி சென்று பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் மனு கொடுக்க இருந்தேன். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி எம்.பி. ஆகியோர் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர் என்றார்.

மேலும்,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமரை சந்தித்து 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவது குறித்து குறிப்பிடவில்லை என்று குற்றம் சாட்டினார்.

ஆனால்,  தமிழக முதல்வரே, செய்தியாளர்கள் சந்திப்பில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி தர மாட்டோம் என்று மக்களை ஏமாற்றுகிறார் என்றார்.

இன்று 16-வது நாளாக விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திட்டத்தை கைவிடவேண்டும்.

தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவரை பொதுமக்கள் நடத்தும் இந்த போராட்டம் தொடரவேண்டும் என்றும்,  மக்கள் போராட்டத்திற்கு தி.மு.க. என்றும் துணை நிற்கும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

பின்னர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு திமுக ஆட்சியின்போதுதான் அனுமதி கொடுக்கப்பட்டதாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஸ்டாலின் பதில் கூறியதாவது,

ஹைட்ரோ கார்பன் திட்ட போராட்டத்தை அரசியலாக்க தி.மு.க. விரும்பவில்லை. அதன் மூலம் ஆதாயம் தேடவேண்டிய நிலையும் தி.மு.க.வுக்கு இல்லை.

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்துவற்காகத்தான் அப்போதைய தி.மு.க. ஆட்சியில் நான் கையெழுத்திட்டேன். திட்டம் கொண்டு வரப்படுவதற்காக அல்ல. அதேபோல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் தி.மு.க.வுக்கு தொடர்பு இல்லை.

இந்த பிரச்சினை தொடர்பாக சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக முதல்வர் உறுதி அளித்தது போல் மத்திய அரசும் திட்டத்தை கைவிடுவதாக உறுதியளிக்க வேண்டும் என்றார்.

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஒட்டுமொத்த கிராமமும் பாதிக்கும். ஆனால் தற்போதைய தமிழக அரசுக்கு அதுபற்றி சிந்திக்க நேரமில்லை. பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்திப்பதற்கு மட்டுமே நேரம் இருக்கிறது என்று கூறினார்.