டில்லி:

ம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து, ஜம்மு காஷ்மீர் மாநில மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சில காங்கிரஸ் தலைவர்கள்  வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் போட்டியில் இருக்கும் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா வரவேற்பு தெரிவித்து உள்ளார். இது காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு ரத்து செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அதற்கு கடந்த 5ந்தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அந்த தகவலை, நேற்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும் அதனை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. பா.ஜ.கவின் செயல் ஜனநாயகப் படுகொலை என்று காங்கிரஸ் வர்ணித்துவருகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் முடிவுக்கு பல முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மாநிலங்களவைத் தலைவராக இருந்த புவனேஸ்வர் கலிட்டா எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேபோல, காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஜனார்த்தன் திரிவேதி, தீபிந்தர் ஹூடா, அதீதி சிங்  ஆகியோர் காஷ்மீர் விவகாரத்தை வரவேற்றுள்ளனர்.

இந்த நிலையில், மத்தியபிரதேசம் குணால் தொகுதியின் முன்னாள் எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா வரவேற்றுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளத.

ஜோதிராதித்யா சிந்தியா,  தற்போது காலியாக உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான போட்டியில் உள்ள சிலரில் ஒருவர் என்பது  குறிப்பிடத்தக்கது.