பேரணியில் பங்கேற்ற லட்சக்கணக்கானவர்களுக்கு நன்றி! ஸ்டாலின் டிவிட்

சென்னை:

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக இன்று  நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட லட்சக்கணக்கானோருக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருந்து தொடங்கிய பேரணி,  ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடைபெற்றது.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், வைகோ உள்பட ஏராளமான கட்சித் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டனர்.

அமைதியாக பேரணி நடைபெற்று முடிவடைந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், இது பேரணி அல்ல  போர் அணி என்றார். பேரணியைத் தடுக்க முயன்று விளம்பரம் தேடித் தந்த அதிமுகவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக  கூறினார்.

இந்த நிலையில், பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது குறித்து ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார்.

அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தமிழகம் எதிரானது என்பதை  காட்ட இன்று சென்னையில் எங்களுடன் இணைந்து, பங்குகொண்ட லட்சக்கணக்கான போராட்டக்காரர்களுக்கு நன்றி, 

இது,  தமிழர்கள் இந்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் என்பதற்கான தெளிவான சமிக்ஞையை பாஜக- அதிமுகஅரசாங்கங்களுக்கு அனுப்பியுள்ளது.

சட்டம் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் தொடர்ந்து எங்கள் எதிர்ப்புக்கு குரல் கொடுப்போம்.  என்று பதிவிட்டு உள்ளார்.