மும்பை: ஆல்ரவுண்டர் அஸ்வினுக்கு இனிமேல் இந்திய ஒருநாள் & டி-20 அணியில் இடம் கிடைக்கும் என்று தான் நினைக்கவில்லை என ஆரூடம் கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் கவாஸ்கர்.

கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அஸ்வின் விளையாடினார். ஜூலை9ம் தேதி மே.இ.தீவுகளுக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடியதுதான் அஸ்வின் கடையாக பங்கேற்றதாக இருந்தது. அதன்பின் கடந்த 4 ஆண்டுகளாக அஸ்வினுக்கு ஒருநாள், டி20 அணியில் பங்கேற்க இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதுவரை மொத்தம் 111 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 675 ரன்களும், 150 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மொத்தம் 46 டி-20 போட்டிகளில் 52 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் கவாஸ்கர் பேசியுள்ளதாவது, “எனக்குத் தெரிந்து இந்திய ஒருநாள் மற்றும் டி-20 அணியில் மீண்டும் ஆல்ரவுண்டர் அஸ்வின் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால், ஏற்கெனவே ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா இருவர் இருக்கிறார்கள்.

இதில் 7வது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும், ஜடேஜாவும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெறலாம் அல்லது ஒரு சுழற்பந்துவீச்சாளர், இரு வேகப்பந்துவீச்சாளர்கள் கூட இடம் பெறலாம்.

ஆதலால், இப்போதுள்ள சூழலில் இந்திய ஒருநாள், டி-20 அணிக்கு தகுதியானவராக அஸ்வின் இருப்பார் என நான் நினைக்கவில்லை. என்னைப் பொருத்தவரை டெஸ்ட் போட்டிக்கு உகந்த வீரராகவே அஸ்வினைப் பார்க்கிறேன். அடுத்த 6 ஆண்டுகள் வரை அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் தாராளமாக விளையாடலாம்” என்றுள்ளார் அவர்.