பாலியல் வன்புனர்வுக்கு ஆளான மனைவிக்காக சட்டப் போராட்டம்: ஹரியானாவில் நடக்கும் நெகிழ வைக்கும் கதை

சண்டிகர்:

8 பேர் கும்பலால் பாலியல் வன்புனர்வுக்கு ஆளான பெண்ணை திருமணம் செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.


இந்த நீண்ட போராட்டம் அந்த தியாக உள்ளம் படைத்த இளைஞரை மட்டுமல்ல, பாலியல் வன்புனர்வுக்கு ஆளான அந்த பெண்ணையும் சட்டம் படிக்க வைத்திருக்கிறது என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது அல்லவா?

சோகக் கதை:

ஹரியானா மாநிலம் ஜின்ட் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான ஜிதேந்தர் தன் போராட்ட கதையை தொடர்கிறார்…

கடந்த 2015-ம் ஆண்டு எனக்கும் என் மனைவிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. என் குடும்பத்தாருடன் ஜிண்ட் நகரில் உள்ள அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

என் வீட்டுக்கும் என் மனைவி வீட்டுக்கும் 30 கி.மீ தொலைவு. ஹரியானா வழக்கப்படி, 4 மாதங்கள் கழித்து திருமணம் ஆகும் வரை ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளக் கூடாது.

மிரட்டி தொடர்ந்து வன்புனர்வு:

ஒருநாள் என் மனைவியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘முக்கிய விசயம் பேச வேண்டும். என் வீட்டுக்கு வரமுடியுமா?’ என பதற்றத்துடன் கேட்டார்.

நானும் பெற்றோருடன் மனைவியின் வீட்டுக்குச் சென்றேன்.அப்போது அவர் கூறிய தகவல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“கடந்த ஒன்றரை வருடங்களாக 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் என்னை பாலியல் வன்புனர்வு செய்து வருகிறது. என்னுடன் சேர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்து மிரட்டி தொடர்ந்து வன்புனர்வு செய்து வருகின்றனர்.

இதையெல்லாம் மறைத்துவிட்டு உங்களுடன் வாழ எனது மனசாட்சி இடம் தரவில்லை. உங்களை திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு நான் தகுதியானவள் அல்ல. என்னை திருமணம் செய்யாதீர்கள்” என கண்ணீர் மல்க கூறினார்.

அதைக் கேட்டதும், “இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், என்னை கடவுள் மன்னிக்க மாட்டார்” என்று என் உள் மனது கூறியது.

“உன்னை திருமணம் செய்துகொள்வதோடு, உனக்கு நியாயம் கிடைக்கவும் போராடுவேன்” என்று என் மனைவியிடம் உறுதியளித்தேன்.

எங்கள் திருமணத்துக்கு முன்பே நியாயம் கேட்டு சட்டப் போராட்டத்தை தொடங்கிவிட்டோம்.
இரண்டு வாரங்கள் கழித்து என் மனைவியின் வீட்டுக்குச் சென்றேன். அவரை பாலியல் வன்புனர்வு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என்றேன். இது குறித்து போலீஸில் புகார் கொடுக்க உதவினேன்.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் என் பெற்றோர் சம்மதத்துடனேயே எங்களுக்கு திருமணம் நடந்தது.

அதன்பிறகு எனக்கும், மனைவியின் குடும்பத்தாருக்கும் மிரட்டல் வர ஆரம்பித்தது.
என் மனைவியை பாலியல் வன்புனர்வு செய்தவர்கள்,வசதியானவர்கள் மட்டுமல்ல அரசியல் பின்புலம் உள்ளவர்களாகவும் இருந்தனர்.

சட்டம் படிக்கத் தூண்டியது:

நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்வதைத் தடுக்க, எங்கள் மீதே 3 புகார்கள் கொடுத்தனர். அதன்பின்னர் போலீஸ் விசாரணையில் அந்த புகார்களில் உண்மை இல்லை என்று தெரியவந்தது.
இந்த சட்டப் போராட்டம் கடுமையானதாக இருந்தாலும், என் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

வழக்கு தொடர்ந்தபோது மிரட்டினார்கள். வழக்கை திரும்பப் பெற்றால் பணம் தருவதாக ஆசை காட்டினார்கள். எனினும் மாவட்ட நீதிமன்றம் அந்த 8 பேரையும் விடுதலை செய்தது.

அதன்பின்னர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தேன். இதற்காக சட்டார் கிராமத்தில் இருந்த இடங்களை ரூ.14 லட்சத்துக்கு விற்றேன்.
நீதிமன்றம் அருகில் இருந்ததால், கிராமத்திலிருந்து ஜிண்ட் நகருக்கு குடிபெயர்ந்தோம். நாங்கள் நிம்மதி இழந்து காணப்பட்டோம். பல இரவுகள் உறக்கமின்றி தவித்த என் மனைவியின் வலியைப் போக்க வேண்டும் என்பதுதான் என் குறிக்கோளாக இருந்தது.

விவசாயத்தைக் கைவிட்டேன். வழக்கறிஞருக்கு கட்டணம் செலுத்த முடியாததால், நானே சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். மற்ற வழக்கறிஞர்கள் மீதான சந்தேகமும் என்னை சட்டம் படிக்கத் தூண்டியது.

எங்களுக்கு பெற்றோர் மட்டுமல்ல, ஊரே ஆதரவாக இருந்தது. என் ஆலோசனையின் படி என் மனைவியும் இப்போது சட்டப்படிப்பு படித்து வருகிறார். இப்போது நாங்கள் சண்டிகரில் வசிக்கின்றோம்.2 வயதில் மகன் இருக்கின்றான்.

நகர்ப் புறங்களில் ‘மீ டூ’ இயக்கம் நடப்பது போல் கிராமப் புறங்களுக்கும் விடிவு வரும். மதுபோதை, போதை வஸ்துக்களை பயன்படுத்துவதே பாலியல் வன்புனர்வு நடப்பதற்கு காரணம். இது பற்றி விவாதிக்கும் சமுதாயம், கடைசியில் பெண்கள் மீதே குற்றச்சாட்டை சுமத்துகின்றனர்.

பெண்களை மதிக்க வேண்டும் என்பது குறித்தும், நமது கலாச்சாரத்தின் மதிப்பு குறித்தும் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும் கற்பிக்க வேண்டும்.

முற்றுப்புள்ளி:

ஹரியானா மாநிலம் முழுவதும் நிலவும் பாலியல் வன்புனர்வு கலாச்சாரத்துக்கு ஒருநாள் முற்றுப் புள்ளி வைக்கப்படும். அந்த முற்றுப்புள்ளி வைப்பதற்கான் நடவடிக்கையில் நானும் என் மனைவியும் களம் இறங்கியுள்ளோம் என்றார் நம்பிக்கையுடன்.