அயோத்தி நில விவகாரம் இத்தோடு முடிவுற வேண்டும் என விரும்புகிறேன்: ஷியா மதகுரு கல்பே ஜவாத்

அயோத்தி நில விவகாரம் இத்தோடு முடிவுற வேண்டும் என தாம் விரும்புவதாக ஷியா மதகுரு கல்பே ஜவாத் கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷியா மதகுரு கல்பே ஜவாத், “உச்சநீதிமன்ற தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம். மேல்முறையீடு செய்வது என்பது இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் உரிமை. அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் இந்த விவகாரம் இத்துடன் நிறைவு பெற வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்கு மேல் இவ்விவகாரத்தை வளர்த்துக்கொண்டு செல்வது நாட்டின் அமைதியை சீர்குலைப்பது போல ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.