சென்னை,

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. ஞானவேல்ராஜா தரப்பில் ஒரு அணியும், டி.ஏ. அருள்பதி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன.

டி.ராஜேந்தர் உள்ளிட்ட சில பிரபலங்கள் அருள்பதி அணியை ஆதரிக்கிறார்கள். இதற்காக நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டி.ஆர். பேசினார்.

அப்போது அவர், “எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என மூன்று பெரும் முதல்வர்களுடன் அரசியல் செய்த நான், இப்போது ஞானவேல் ராஜா போன்றவர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியுள்ளதே என்பதை நினைக்கும்போது அவமானமாக உள்ளது.

ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பான பதவிக்கு வந்தார். ஆனால் பொறுப்பே இல்லாமல் நடந்து கொண்டார். நான் ஒரு விநியோகஸ்தன். ஆரம்ப காலத்திலிருந்து எத்தனையோ படங்களை விநியோகித்திருக்கிறேன். ரஜினிகாந்தின் ராஜாதிராஜா கூட நான் விநியோகித்த படம்தான். ஒரு தயாரிப்பாளனாக எத்தனை வெற்றிப் படங்களைத் தந்தவன் என்பதை புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் இந்த ஞானவேல் ராஜாவும் விஷாலும் என் படப் பிரச்சினைக்கு எத்தனையோ முறை போன் போட்டபோதும் ஒரு முறை கூட போனை எடுக்கவே இல்லை.

விஷாலும் ஞானவேல் ராஜாவும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொறுப்புக்கு வந்தார்கள். ஆனால் சங்கத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பொதுக்குழுவைக்கூட ஒழுங்காக நடத்தத் துப்பில்லாதவர்கள்.

விஷால் என்ன லாடு லபக்கு தாஸா? அவர் என்ன ஹிட்லரா?

ஹிட்லருக்கு பட்லராக இருக்கக்கூட லாயக்கில்லாதவர். ஒரு தமிழனாக நான் வெட்கபடுகிறேன். என்னை திட்டமிட்டு அவமதித்தார்கள் இந்த விஷாலும் ஞானவேல் ராஜாவும். நான் பார்க்காத அரசியல்வாதியா, தயாரிப்பாளர்களா… ஆனால் எனக்கே இந்தக் கதி என்றால், மற்ற உறுப்பினர்கள் நிலை என்ன?

எனவே விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் எக்காரணத்தைக் கொண்டும் இந்த ஞானவேல் ராஜா கோஷ்டி வரக்கூடாது,” என்று ஆவேசமாக பேசி முடித்தார் டி.ஆர்.