ஜி-23 தலைவர்களின் கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை: வீரப்ப மொய்லி

புதுடெல்லி: ஜம்முவில் நடைபெற்ற ஜி-23 எனப்படும் அதிருப்தி தலைவர்களின் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என்று விளக்கமளித்துள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான வீரப்ப மொய்லி.

அதேசமயம், அந்தக் கூட்டம் அதிருப்தியாளர்களின் சந்திப்பு இல்லையென்றும், அனைவருமே தலைமையுடன் ஒன்றிணைந்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர் வீரப்ப மொய்லி.

காங்கிரசில் நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்கக் கோரி, கபில்சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரசின் மூத்த தலைவர்கள், தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள். இவர்கள் அதிருப்தி தலைவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றன மற்றும் ஜி-23 என்றும் இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.

இந்நிலையில்தான், அந்தக் குழுவைச் சேர்ந்த பல தலைவர்கள், ஜம்முவில் கூடி ஆலோசித்தனர். ராஜ்ய சபாவிலிருந்து குலாம் நபி ஆசாத் ஓய்வுபெற்றதை அங்கீகரிப்பதற்காக இக்கூட்டம் கூட்டப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், அதிருப்தி தலைவர்களின் வலிமையைக் காட்டுவதற்காக, இக்கூட்டம் கூட்டப்பட்டதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்தான், இக்கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என்று விளக்கமளித்துள்ளார் வீரப்ப மொய்லி.