சென்னை,

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகரனை அமைச்சர் உதயக்குமார் வாழ்த்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், தினகரனை வாழ்த்தியது நான் அல்ல என்றும், அதுகுறித்து விசாரணை நடத்தும்படி யும் போலீசில் அமைச்சர் உதயக்குமார்  சார்பாக புகார் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி அமோக வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில், அவர் தனக்கு 50க்கம் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், விரைவில் ஆட்சி கலையும் என்று  கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அமைச்சர் உதயக்குமார் தனது டுவிட்டர் பதிவுமூலம் டிடிவிக்கு வாழ்த்து தெரிவித்ததாக சமுக வலைதளங்களில் செய்தி வைரலாக பரவியது. இது அதிமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமைச்சர் உதயக்குமார் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், தன் பெயரில் தினகரனை வாழ்த்தியதாக வெளியான ட்விட்டர் அக்கவுண்ட் தன்னுடையது அல்ல என்றும்,  தன் பெயரில் போலி அக்கவுண்ட்டை யாரோ தொடங்கி இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தும்படி  சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.

இவர்  அதிமுக இரண்டாக உடைந்திருந்தபோது,  டிடிவியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.