யநாடு

ராகுல் பிறக்கும் போது பிரசவ நேரத்தில் உடன் இருந்த செவிலியர் வயநாட்டை சேர்ந்த ராஜம்மா வவாதில் ஆவார்.

கடந்த 1970 ஆம் வருடம் ஜூன் மாதம் 19 அன்று டில்லியில் உள்ள ஹோலி ஃபேமிலி ஹாஸ்பிடல் என்னும் மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தார். அப்போது ராஜம்மா வவாதில் என்னும் பெயர் கொண்ட கேரள பெண்மணி பிரசவ அறையில் செவிலியராக இருந்தார். அவர் கேரள மாநிலம் வயநாடை சேர்ந்தவர் ஆவார். அவர் ராகுல் காந்தி பிறந்த போது நிகழ்ந்தவைகளை நினைவு கோரி உள்ளார்.

                 ராஜம்மா

தற்போது 72 வயதாகும் ராஜம்மா, “மகப்பேறுக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இருந்தே நாங்கள் பிரதமரின் பேரக் குழந்தையை காண ஆவலுடன் இருந்தோம். பிரதமர் குடும்பத்தினர் என்பதற்காக அவர்களில் யாரும் மருத்துவமனை விதிகளை மீறவில்லை. சோனியா காந்தி எங்களுடன் நன்கு ஒத்துழைத்தார். அவருக்கு சுகப் பிரசவமாக ராகுல் பிறந்தார். குழந்தை மிகவும் அழகாக இருந்ததால் நாங்கள் உடனடியாக அவரை தூக்கி கொஞ்சினோம்.

உண்மையில் அவருடைய பெற்றோர்களுக்கு முன்பே நான் அவரை தூக்கி வைத்துள்ளேன். முதலில் ராகுல் காந்தியை கையில் ஏந்தியவள் நான் என்பதில் எனக்கு பெருமை உண்டு. அப்போது மகப்பேறு அறைக்கு வெளியே ராஜிவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி காத்திருந்தனர். அவர்களை உள்ளே அழைத்து குழந்தையை காணலாம் என தெரிவித்தும் இருவரும்   அறைக்குள் வரவில்லை.

அப்போது சுற்றுப்பயணத்தில் இருந்த பிரதமர் இந்திரா காந்தி மூன்றாம் தினம் வந்து குழந்தையை பார்த்தார். மருத்துவமனை விதி முறைகளின்படி குழந்தையை தொடக்கூடாது என்பதால் அவர் தூரத்தில் இருந்தே தொடாமல் பார்த்தார். தற்போது அந்த குழந்தை எங்கள் வயநாடு தொகுதியில் போட்டி இடுகிறார். அவரை நான் எனது பேரன் எனவே கருதுகிறேன்.

இதுவரை அவரை நான் சந்திக்கவில்லை. விரைவில் எனது பேரனை சந்தித்து பேசுவேன். அப்போது அவரிடம் சொல்ல நிறைய விஷயங்கள் வைத்துள்ளேன். அதை அவரிடம் சொல்லி மகிழ்வேன். எனது பேரனுக்கு அவர் பிறந்த விதம்,  முதல் முதலில் கண்ணைக் கொட்டியபடி பார்த்தது, நாங்கள் அவரை பிரதமரின் பேரன் என கொஞ்சியது என பல விவரங்கள் சொல்ல வேண்டும்.  எனது பேரனுக்கு நான் வாக்களித்ததில் மிகவும் மகிழ்கிறேன்” என தெரிவித்துள்ளார்.