சென்னை:

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவில் இடம் கிடைக்காததால், அதிருப்தியில் இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், இன்று திடீரென திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வேன் என்று கூறினார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது,பொதுப்பணி துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தவர்  ராஜகண்ணப்பன்.  இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால், ஜெயலலிதா அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

சில காலம் அமைதியாக இருந்த ராஜகண்ணப்பன், தற்போது,  அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டார்.  ஆனால் கட்சியில் அவருக்கு வாய்ப்பு வழங்க வில்லை. இதன் காரணமாக அதிருப்தியில் இருந்த ராஜகண்ணப்பன், தி.மு.க.வுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்து உள்ளார்.

இன்று மாலை திடீரென , அண்ணா அறிவாலயத்துக்கு வந்த ராஜ கண்ணப்பன், திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்தார். அபபோது,  பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ கண்ணப்பன்,   மக்களவை தேர்தல் மற்றும் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்காக பாடுபடப் போவதாகவும், அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்’ என்று  கூறினார்.

“ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை” என்றவர்,. “அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்து விட்டதாகவும், அதிமுகவில் தற்போது இருப்பவர்கள் தொண்டர்கள் இல்லை” என்றும் தெரிவித்தார்.

ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஏராளமான பிரச்னைகள் இருக்கிறது. அதிமுகவில் சிறுபான்மையினருக்கு சீட் தரவில்லை. ஓபிஎஸ் தனது மகனுக்கு சீட் வாங்க கட்சியை பாஜவிடம் அடகு வைத்துவிட்டார்.  ப.சிதம்பரத்திற்காக சிவகங்கை தொகுதியில் பிரசாரம் செய்வோம் என பேட்டியளித்தார்.

‘திராவிட இயக்கத்தின் பூமியான தென் மாவட்டங்களில் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.