அரசியலுக்கு வருவேன்!: விஜய் ஓப்பன் டாக்

தான் அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் விஜய் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்,  மெர்சல் படத்தைத் தொடர்ந்து சர்கார் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறுகிறார். இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும்,  யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய், “என்னுடைய சில திரைப்படங்கள் வெற்றியடையும்போது ஏற்படும் மகிழ்ச்சி,  அதற்கு காரணமான உங்களை பார்க்கும்போதும் ஏற்படுகிறது. ஒரு விரல் புரட்சி பாடல் ஒட்டுமொத்த மக்களின் அடையாளம். இந்தப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் கிடைத்தது ஆஸ்கார் கிடைத்தது போல.

என்னுடன் சேரும்போதெல்லாம் வெற்றிப்படம் கொடுக்கும் இயக்குநர் முருகதாசுக்கு நன்றி. விவேக் எங்களுடன் இணைந்து பாடல் எழுதும்போது தானாக ஒரு மேஜிக் நிகழ்கிறது. யோகி பாபுவின் அசுர வளர்ச்சி பிரம்மிக்க வைக்கிறது. நான் வளர்ச்சி என சொன்னது அவரது முடியை அல்ல, கேரியரை.

வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். ஆனால், நாம் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே ஒரு கூட்டமே உழைத்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது? அதுதான் இயற்கை என்று  விட்டுவிட வேண்டியதுதான். உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னு இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்” என்று விஜய் பேசியபோது கைதட்டல் வானத்தைப் பிளந்தது.

தொடர்ந்து பேசிய விஜய், “மெர்சல் படத்துல அரசியல் கொஞ்சம் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் “அரசியல மெர்சல்” செய்திருக்கிறோம்.

எல்லோரும் தேர்தலில் நின்றுவிட்டு சர்கார் அமைப்பார்கள். ஆனால் நாங்கள் சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப்போகிறோம்” என்று விஜய் பேசியபோது, ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். அடுத்ததாக விஜய், “நான் படத்தைச் சொன்னேன்” என்றார்.

மேலும், “நிஜத்தில் நான் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். ஒருவேளை உண்மையில் முதல்வரானால், லஞ்சம், ஊழலை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதனை செய்வேன். ஆனால், அதனை ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவிற்கு நாம் பழகிவிட்டோம்.

ஒரு மாநிலத்தில் மேல்மட்டத்தில் இருக்கும் எல்லோரும் சரியாக இருந்தால், எல்லோரும் சரியாக இருப்பார்கள். பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வாங்கக்கூட காசு கொடுக்க வேண்டியுள்ளது.

ஒன்றுமட்டும் உறுதி. தர்மம்தான் வெல்லும், நியாயம்தான் ஜெயிக்கும். ஆனால் கொஞ்சம் தாமதாக ஜெயிக்கும். அடிப்பட்டு வருபவன் ஒருநாள் தலைவன் ஆவான். அப்போதுதான் நடக்கும் உண்மையான சர்கார்” என்று விஜய் பேசி முடிக்கையில் ரசிகர்களின் ஆரவராரம் அடங்க வெகு நேரம் ஆனது.

ஏற்கெனவே நடிகர் விஜய், விஜய், “நான் எந்த பணியில் ஈடுபட்டாலும் நூறு சதவீதம் முழுமையாக ஈடுபடுவேன். எல்லாவற்றுக்கும் காலமும், சூழலும் முக்கியம் அல்லவா. அரசியல், ஆரவாரமான அலைகள் வீசும் பெருங்கடல். அதில் நீந்தி கரை சேர வேண்டும் என்றால் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு என்னை நான் தயார்படுத்தி வருகிறேன். அதற்கான அரசியல் பாடம் பயின்று என் இயக்கத்தினரையும் தயார்படுத்தி வருகிறேன்.

எப்போதும் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். அதை பலப்படுத்துவதில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்தால், நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்பும்போது, கண்டிப்பாக களத்தில் இறங்கி களப்பணி ஆற்றுவேன். நான் ஒரு முடிவெடுத்தால், அந்த முடிவை நான் நினைத்தால்கூட மாற்றிக்கொள்ள  மாட்டேன். இது, சினிமா வசனம் மட்டுமல்ல. நிஜமும் அப்படித்தான்” என்று ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

ஆக அவர் அரசியலில் ஈடுபட இருப்பது உறுதியாகியிருக்கிறது என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.