கங்கை நதிக்காக சாகும் வரை உண்ணாவிரதம் : சன்னியாசி சூளுரை

ரித்வார்

ங்கை நதி இறந்துக் கொண்டு இருப்பதாகவும், அதை தடுக்க சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாகவும் ஒரு சன்னியாசி சபதம் செய்துள்ளார்.

அரித்வாரில் இருந்து சமவெளியில் கங்கை நதி தனது பயணத்தை தொடங்குகிறது.   இந்த அரித்வாரில் கங்கை கரையில் அமைந்துள்ள மாத்ரி சதன் என்னும் ஆசிரமத் தலைவர் சுவாமி ஞான் சுவரூப் சனந்த்.   இவர் கங்கை நதியை மாசடைவதில் இருந்து காக்க பெரிதும் பாடுபட்டு வருபவர் ஆவார்.  இவரும் இவர் சீடர்கள் நிக்மானந்த், தயானந்த், யஜ்னானந்த் ஆகியோர் கங்கை நதிக்கரையில் சட்ட விரோதமாக மணல் சுரங்கம் அமைப்பதை தடை செய்து கடந்த 2011 ஆம் வருடம் உண்ணாவிரதம் தொடங்கினர்.

இந்த உண்ணாவிரதத்தில் 115 ஆவது நாளில் நிக்மானந்த் மரணம் அடைந்தார்.   அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு அப்போதைய பாஜக அரசும் அந்த சுரங்கத்தின் உரிமையாளரும் இணைந்து விஷம் அளித்ததாக புகார் எழுந்தது.   இவர்களுக்கு ஆர் எஸ் எஸ் அமைப்பு ஆதரவளித்தது.    ஆனால் அது குறித்து எவ்வித விசாரணையும் நடக்கவில்லை.

தற்போது சுவாமி ஞான் சுவரூப் சனந்த் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.    அவர் நாளுக்கு நாள் பலகீனம் அடைந்து வருகிறார்.   இது குறித்து அவருடைய ஆசிரம சீடர்கள் கவலை அடைந்துள்ளனர்.   ஆனால் சுவாமி தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் கங்கை நதி இறந்துக் கொண்டு வருவதால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.   மேலும் இதற்காக தாம் இறக்கும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறி உள்ளார்.

இது குறித்து சுவாமி, “புண்ணிய தலங்களான அரித்வார், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரியை இணைக்கும் வகையில் புதிய சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதனால் பல மரங்களும், காடுகளும் அழிக்கப்படும் நிலை உண்டாகி இருக்கிறது.   ஆகையால் அதை விட முக்கியம் தற்போது மாசு பட்டு வரும் கங்கை நதியை மீட்கும் பணியை மேற்கொள்வதே.     கங்கையில் பல தொழிற்சாலைகளின் கழிவு நீர் சுத்திகரிக்கப் படாமல் கலக்கபடுகின்றன.  அதை தடுக்க உத்தரகாண்ட் அரசு எதையும் செய்யவில்லை.

மோடி அரசின் தூய்மை இந்தியா என்னும் திட்டத்தினால் எந்த பயனும் உண்டாகவில்லை.    உடனடியாக கங்கையை சுத்தப்படுத்தவும் அசுத்தங்களை கலக்காமல் இருக்கவும் ஒரு சட்டம் இயற்ற வேண்டும்.   அது வரை எனது உண்ணாவிரத போராட்டம் தொடரும்.    நான் இறக்கும் வரை இந்த போராட்டத்தை நடத்தி தற்போது செத்துக் கொண்டிருக்கும் கங்கை நதியை காப்பாற்ற உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.