50 ஆயிரம் ரூபாயை காவல்துறையிடம் ஒப்படைத்த சிறுவனை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன்!: ரஜினிகாந்த்

சாலையில்கிடந்த ரூ. 50,000 பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த, “நேர்மை சிறுவன்” முகமது யாசினை தனது பிள்ளையாக எண்ணி படிக்கவைப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியில் வசித்து வருபவர்கள் பாட்ஷா – அப்ரோஸ்பேகம் தம்பதி. பாட்ஷா, வீதிகளில் பனியன் உள்ளிட்ட ஆடைகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அப்பேராஸ்பேகம், துணி தைப்பது, வீட்டு வேலைகள் செய்வது போன்ற வேலைகளை செய்து வருகிறார்.

ஏழ்மையில் உழலும் இவர்களத இளைய மகன் முகமது யாசின். சின்னசேமூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 11ம் தேதிபள்ளிக்குச் சென்று கொண்டிருந்த முகமது யாசின், பள்ளி அருகே 50 ஆயிரம் ரூபாயைக் கண்டெடுத்துள்ளார். அதைத் தனது ஆசிரியர்களிடம் கொடுக்க, அவர்கள் சிறுவனுடன் சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷிடம் அளித்தனர்.

 

கிழிந்த உடையை அணிந்துகொண்டிருந்த நிலையிலும் நேர்மையாக செயல்பட்டு பணத்தை காவல்துறை வசம் அளித்த முகமது யாசினை பாராட்டிய காவல்துறையினர் யாசினுக்கு, புதிய பள்ளிச் சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை அளித்தனர். மேலும், வரும் 19-ம் தேதி சிறுவனுக்கு பாராட்டு விழாவுக்கும் காவல்துறையினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

சிறுவனின் கள்ளம்கபடமில்லாத செயல், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவ, பல்வேறு தரப்பினரின் பாராட்டினர். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரைத்துறையினரும் சிறுவன் யாசினுக்கு பாராட்டுகள் தெரிவித்ததோடு, உதவிகள் செய்யவும் முன்வந்திருக்கிறார்கள்.

இதற்கிடையே சிறுவன் தனக்கு நடிகர் ரஜினியை நேரில் பார்க்க வேண்டும் என விருப்பம் என்று தெரிவித்திருந்தார். அதன்படி அவரின் விருப்பம் இன்று நிறைவேறியுள்ளது. சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் சிறுவன் முகமது யாசின் தனது குடும்பத்தினருடன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார்.

அப்போது சிறுவன் முகமது யாசினுக்கு தங்கச் செயின் அளித்து ரஜினி பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, சிறுவன் முகமது யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன். அவர் என்ன படிக்க நினைத்தாலும் அதனையே படிக்க வைப்பேன் என்று ரஜினி தெரிவித்தார்.