திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 15% உள் இடஒதுக்கீடு பெற்றுத் தருவேன்! வேல்முருகன்…

சென்னை: அதிமுக, பாமக இடையே வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும்,   வன்னியர்களுக்கு 15% உள் இடஒதுக்கீடு பெற்றுத் தருவேன் என  தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்  வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ளது. ஆட்சி பிடிக்க திமுக வியூகம் வகுத்து வருகிறது. ஆட்சி தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் அதிமுக வியூகம் வகுக்த்து வருகிறது. இரு கட்சிகளின் தலைமையில் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, வன்னியர் இடஒதுக்கீடு குறித்து கெடு வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  அதில், இதுவரை எந்தவொரு உடன்பாடும் எட்டாததால்,  அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு வன்னியர் அமைப்பான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்,  திமுக ஆட்சி அமைந்தால், வன்னியர்களுக்கு 15 சதவிகித உள்ஒதுக்கீடு பெற்றுத்தருவேன் என்று தெரிவித்து உள்ளார். அத்துடன் இந்த உள் இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் உள்ள நிறுவனங்களில் வழங்கப்படும் வேலைகளில், தமிழகர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்,  உதாரணத்துக்கு நெய்வேலி என்.எல்.சி.யில் 259 பொறியாளர் தேர்வில் 8 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த 8 பேரிலும் 2 பேர்தான் தமிழர்கள். தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்பதே எங்களது எதிர்காலத் திட்டமாகவும், வரும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் முதன்மை பிரச்சாரமாகவும் இருக்கும் என  வேல்முருகன் கூறியுள்ளார்.