சென்னை: அதிமுகவின் ஊழல்களை ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அம்பலப்படுத்துவேன் என, அவதூறு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான மு.க. ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், மேலும் 6 அவதூறு வழக்குகள் தொடர்பான விசாரணையில் இன்று ஆஜரானார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், அவதூறு வழக்குகள் போட்டு தி.மு.க.வின் ஜனநாயக கடமையைத் தடுக்கவும் முடியாது; மிரட்டவும் முடியாது என  கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது  டிவிட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“இன்று “எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான” சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்த ஆறு அவதூறு வழக்குகளில் ஆஜரானேன். மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல அவதூறு வழக்குகளை ரத்து செய்து அ.தி.மு.க. அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனாலும் இந்த அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

ஆளும்கட்சியின் தவறுகளை – ஊழல்களை விமர்சிப்பது ஒரு எதிர்க்கட்சியின் முக்கியக் கடமை. அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம்!

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சில பத்திரிகைகள் ஆளும்கட்சியின் தவறுகளை எழுதுகின்றன. சில பத்திரிகைகள் எழுதுவதில்லை. ஆகவே பிரதான எதிர்க்கட்சியாக தி.மு.க. விமர்சனம் செய்கிறது.

இதுமாதிரி அவதூறு வழக்குகள் போட்டு தி.மு.க.வின் ஜனநாயக கடமையைத் தடுக்கவும் முடியாது; மிரட்டவும் முடியாது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சுரிமையை, எத்தனை வழக்குகள் போட்டாலும் பழனிசாமியால் தடுக்க முடியாது.

என் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளைச் சட்டரீதியாகச் சந்திப்பேன். அ.தி.மு.க.வின் ஊழல்களை ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அம்பலப்படுத்துவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.