8 பேரை வெட்டுவேன்: மன்சூர் அலிகான் மீண்டும் சர்ச்சை பேச்சு

சேலம்:

சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசினார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நடைபெற்ற காவிரி போராட்டத்தின்போது, இரவு கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க சென்ற போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, சமீபத்தில்தான் ஜாமினில் வெளி வந்துள்ள மன்சூர் அலிகான், தற்போது சேலத்தில், 8 பேரை வெட்டுவேன் என்று கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

பொதுமக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து  வரும் மன்சூர் அலிகான் சமீபத்தில் தூத்துக்குடி சென்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது சேலத்தை சுற்றி உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக அங்கு முகாமிட்டுள்ளார்.  அங்கு பல ஏரிகளை பார்வையிட்டு வரும் அவர், பல இடங்களில் சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் உடன் இணைந்து மரங்களையும் நட்டு வருகிறார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான்,   நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

சேலத்தில் விமான நிலையம் மற்றும் போக்குவரத்துக்காக  எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது என்று எச்சரித்த மன்சூர், இதன் காரணமாக ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தினார்.

மேலும் இதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன் என்றும், எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்று விட்டு சிறைக்கு செல்வேன் என்றும் அதிரடியாக கூடிறனார்.

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.