லண்டன்:

பிஎன்பி வங்கி மோசடி காரணமாக லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல வைர வியாபாரி, நிரவ்மோடி யின் ஜாமின் மனுமீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தினால், தற்கொலை செய்துகொள்வேன் என்று  நிரவ் மோடி மிரட்டி உள்ளார். இதைத்தொடர்ந்து, நிரவ் மோடியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு லண்டனுக்குத் தப்பிச்சென்றவர் குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. லண்டனில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது லண்டனின் வாண்டஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனக்கு ஜாமின் வேண்டும் என்று நீதிமன்றத்தில்  பலமுறை ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்து வருகிறார்.  ஆனால், இந்தியா தரப்பில்  நிரவ் மோடியை நாடு கடத்துமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. அவரது பல ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், நிரவ் மோடி சார்பில் மீண்டும் புதிதாக ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்மா அர்பட்நாட் முன்பு நடைபெற்றது. அப்போது இந்தியா தரப்பில்  சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் அடிப்படையில் தன்னை  இந்தியாவுக்கு ஒப்படைக்க உத்தரவிட்டால் தான் தற்கொலை  செய்வதாகக் கூறியதுடன், இந்தியாவில் நியாயமான விசாரணை கிடைக்காது என்ற அச்சத்தை வெளிப்படுத்தினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிரவ் மோடியின் ஜாமின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 4ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.