நான் இப்போதைக்கு ஓய்வு பெறப்போவதில்லை: ஜேம்ஸ் ஆண்டர்சன்

லண்டன்: தான் இப்போதைக்கு ஓய்வுபெற போவதில்லை என்றும், அடுத்த ஆஷஸ் மற்றும் அதற்கு மேலும் ஆடுவேன் என்றுகூறி, தனது ஓய்வு குறித்து நிலவிய கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இங்கிலாந்தின் 38 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இவர் இதுவரை 154 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 590 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “என்னிடம் ஆற்றல் இன்னும் இருக்கிறது. எனவே, ஓய்வுகுறித்து இப்போதைக்கு பேச்சே இல்லை. எனக்கு முதல் டெஸ்ட் போட்டி சற்று வெறுப்பை ஏற்படுத்துவதாகவே இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக உணர்ச்சிவசப்பட்டேன்.

நான் முதன்முதலில் ஆடத்தொடங்கிய போது ஏற்பட்ட வெறுப்பு போல் இருந்தது அது. கோபத்தில் இருக்கும்போது நாம் சில தவறுகளை இழைப்போம்.

நான் அடுத்த ஆஷஸ் தொடரில் ஆட விரும்புகிறேன். ஆனால் அதுவே என் கவனம் என்று அர்த்தமல்ல. எவ்வளவு நாட்கள் ஆட முடியுமோ, அவ்வளவு நாட்கள் ஆட விரும்புகிறேன். இன்னும் எனக்கு ஆட்டத்தின் மீது தீராத ஆவல் உள்ளது. அடுத்தப் போட்டியில் அனைத்தையும் சரிசெய்வேன்” என்றார்.