அமலாக்கப்பிரிவு விசாரணையால் அரசை விமர்சிப்பது நிற்காது : ராஜ் தாக்கரே

மும்பை

தனக்கு அமலாக்கப்பிரிவு விசாரணை நோட்டிஸ் வந்துள்ளதால் அரசை விமர்சிப்பதை நிறுத்தப் போவதில்லை என மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனைத் தலைவர்  ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரே ஒரு கட்டிட ஒப்பந்தத்தை எடுத்து நடத்தினார். அதில் அவருடன் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர்ஜோஷியின் மகன் உமேஷ் ஜோஷி பங்கு தாரராக இருந்தார். அந்த நிறுவனம் தற்போது பண மோசடி வழக்கில் ஈடுபட்டுள்ள ஐ எல் அண்ட எஃப் எஸ்  நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்தில் பங்கு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

உமேஷ் ஜோஷியின் நிறுவனத்தில் இருந்து ராஜ் தாக்கரே விலகி விட்ட போதிலும் ஐ எல் அண்ட் எஃப் எஸ் நிறுவனம் குறித்த வழக்கில் உமேஷ் ஜோஷி மற்றும்  ராஜ் தாக்கரேவுக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை நோட்டிஸ் அனுப்பி உள்ளது. நேற்று காலை விசாரணைக்காக ராஜ் தாக்கரே அமலாக்கப்பிரிவு மும்பை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் அவர் மனைவி ஷர்மிளா,  மகன் அமித், மருமகள் மிதாலி, மற்றும் மகள் ஊர்வசி ஆகியோர் வந்திருந்தனர்.

அவர்கள் விசாரணை முடியும் வரை அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஓட்டலில்  காத்திருந்தனர். காலை 11.35 மணிக்கு ஆரம்பித்த விசாரணை இரவு 8.10 வரை நடந்துள்ளது. சுமார் 8 மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்த விசாரணை விவரம் இன்னும் வெளிவரவில்லை. விசாரணை முடிந்து வந்த ராஜ் தாக்கரே செய்தியாளர்களிடம், “அமலாக்கத்துறையினர் என்னிடம் எப்படி வேண்டுமானாலும் விசாரணை செய்யட்டும். ஆனால் நான் அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வதை நிறுத்த மாட்டேன்”எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி