இனி எக்காலத்திலும் சசிகலாவுடன் பேச மாட்டேன் என்று அவரது சகோதரரும், அம்மா அணி தலைவருமான திவாகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் சகோதரி மகன் தினகரன் – சகோதரர் திவாகரன் ஆகியோருக்கிடையே மோதல் உச்சம் அடைந்துள்ளது. இந்த நிலையில் சசிகலா தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மூலம்,  சில நாட்களுக்கு முன், சசிகலாவின் பெயரையோ படத்தையோ திவாகரன் பயன்படுத்த கூடாது என்றும் என்னை உடன்பிறந்த சகோதரி என்றும் சொல்லக்கூடாது என திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீஸ் தினகரன் தூண்டுதலின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது என திவாகரன் தரப்பினர் கூறி வந்தார்கள்.

இந்த நிலையில் மன்னார்குடியில் இன்று அம்மா அணியின் ஆலோசனை கூட்டம் திவாகரன் தலைமையில் நடைபெற்றது.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், “அம்மா (ஜெயலலிதா)வின் குறிக்கோள் வீணாகிவிடக் கூடாது. எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா பெயரில் தமிழகம் முழுவதும் கட்சி, மன்றம் என்று  பலரும் துவங்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதே எங்கள் நோக்கம். எங்கள் அம்மா அணியில் உள்ள சில தொண்டர்கள் சசிகலாவின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி விளம்பரம் செய்து வந்தனர். நான் அப்போதே இது வேண்டாம் என்றேன்.

ஆனால், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலாவின் படத்தை தவிர்த்தனர். நாமும் அது போன்ற தவறைச் செய்யக்கூடாது” என்று தொண்டர்கள் கூறினர். ஆகவே உறுதியாக எதுவும் கூற முடியாமல் இருந்தேன்.

ஆனால் இப்போது தொண்டர்களே புரிந்துகொண்டிருப்பர். இனி எங்கள் அணியில் சசிகலாவின் பெயர் புகைப்படங்கள் இருக்காது. எங்களுக்கு அண்ணா, தலைவர் (எம்.ஜி.ஆர்.), அம்மா (ஜெயலலிதா)  பெயர் மட்டும் போதும் அதை வைத்து நாங்கள் எங்களின் அணியை சிறப்புடன் கொண்டு செல்வோம்.

தினகரன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறார். முன்னதாக சசிகலா, ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இடையே மறைமுகமாகவும் நேரடியாகவும் பிரச்னையை ஏற்படுத்தினார். இப்போது எனக்கும் என் முன்னாள் சகோதரி சசிகலாவுக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்தி என் வாயிலிருந்தே சசிகலாவை பற்றி அவதூறாகப் பேச வைத்து அவரின் புகழுக்கு என் மூலம் களங்கம் விளைவிக்க திட்டமிடுகிறார்.

நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன். இனி சசிகலாவிடம் பேசமாட்டேன். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். அரசியல் ரீதியாக மட்டுமே அவரைப் பற்றிப் பேசுவேன். இன்னும் தேர்தல் காலங்களில் கடுமையாக விமர்சனம் செய்வேன் மற்றபடி தனிப்பட்ட முறையில் அவரைச் சந்திக்கப்போவதுமில்லை அவரைப் பற்றிப் பேசமாட்டேன்.

தினகரன், தான்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று பகல் கனவு கண்டு மனநோய்க்கு ஆளாகிவிட்டார். அவர்களைப்போல் இல்லாமல் எங்களின் முதல் பிரச்னை காவிரி. அதற்குத் தொடர்ந்து போராடுவோம் குரல் கொடுப்போம்” என்று திவாகரன் தெரிவித்தார்.