முதல்வர், அமைச்சர், ஊதியத்தில் பிடித்தம் செய்தாவது 10 லட்சம் பேருக்கு வேலை : தேஜஸ்வி யாதவ்

பாட்னா

முதல்வர், அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்தாவது 10 லட்சம் பேருக்கு  வேலை அளிக்கப் போவதாகத் தேஜஸ்வி யாதவ தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து வருகிறது.  கடந்த அக்டோபர் 28 ல் முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது.  இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 94 தொகுதிகளில் நடைபெறுகிறது.   இங்கு பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியும் ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணியும் மோதுகின்றன.

ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி சார்பில் அக்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பாஜக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.   தேர்தல் பிரசாரம் சூடு பறக்க நடந்துக் கொண்டு வருகிறது.

தேஜஸ்வி யாதவ் தனது பிரசாரக் கூட்டத்தில், “பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 50 ஆகக் குறைத்துள்ளார். ஆனால் அவரே 70 வயதைக் கடந்துள்ளார்.   எனவே பொதுமக்கள் இம்முறை அவரை ஓய்வு பெற வைக்க உள்ளனர்.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்போம்.

நாங்கள் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க உள்ளோம்.  இதற்கான நிதிக்காக முதல்வர், அமைச்சர்கள், மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்தாவது நாங்கள் வேலை வழங்குவோம்.” என அறிவித்துள்ளார்.