கூவத்தூர் ரகசியம் வெளியிடுவேன்: ஆளுங்கட்சிக்கு கருணாஸ் மீண்டும் மிரட்டல்

சென்னை:

கூவத்தூரில் என்ன நடந்தது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தேவைப்படும்போது அந்த ரகசியத்தை வெளியிடுவேன் என்று  ஆளுங்கட்சிக்கு கருணாஸ் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

அரசுக்கும், எடப்பாடிக்கும் எதிராக செயல்பட்டு வந்த கருணாஸ் எம்எல்ஏ, இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ளார். இதற்கிடையில், தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள அனுமதி கோரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதை ஏற்று  3 நாள் நிபந்தனையை தளர்வு செய்து எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதி மன்றம் கூறி உள்ள நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாஸ் உள்பட சிலர் அரசுக்கு எதிராக பேசி வருகின்றனர். அவர்களின் பதவியை பிடுங்க அதிமுக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்கள் கருணாசிடம் அதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கருணாஸ்,   எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் மாறப்போவதில்லை என்றார். மேலும் சபாநாயகருக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதிலும் உறுதியாக உள்ளதாக கூறிய கருணாஸ், கூவத்தூரில் என்ன நடந்தது என்பதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறினார். நிச்சயமாக கூவத்தூர் ரகசியத்தை ஒரு நாள் வெளியிடுவது உறுதி என்றும் கருணாஸ் கூறினார்.

தேர்தல் சமயத்தில் வெளியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, தேர்தல் ஆதாயத்திற்காக கூவத்தூர் ரகசியத்தை பயன்படுத்தமாட்டேன் என்று  பதில் அளித்துள்ளார்.

கருணாசின் இந்த பதில் ஆளும் தரப்பிற்கு மீண்டும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.