தனது ஐபிஎல் கேரியர் குறித்து கோலி கூறுவது என்ன?

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் நீடிக்கும் வரை, பெங்களூரு அணியில்தான் நீடிப்பேன் என்றுள்ளார் அந்த அணியின் கேப்டன் விராத் கோலி.

கடந்த 2008ம் ஆண்டு முதலே, பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் விராத் கோலி. கடந்த 2009. 2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில், இவரின் தலைமையில் பெங்களூரு அணி இறுதிப்போட்டி வரை சென்றது.

ஆனால், ஒருமுறைகூட கோப்பை வெல்லவில்லை. ஆனால், சமீப ஆண்டுகளில், பெங்களூரு அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. கோலி மீதும் இதற்கான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், இவர் பெங்களூரு அணியைவிட்டு விலகவுள்ளார் என்று தகவலகள் கசிந்தன.

இந்நிலையில்தான், “ஐபிஎல் தொடரில் நீடிக்கும் வரை பெங்களூரு அணியில் நீடிப்பேன். இந்த அணிக்கு கோப்பை வென்றுதர வேண்டுமென்பது எனது நீண்டநாள் கனவு.

இந்த அணியை விட்டு வெளியேற வேண்டுமென்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை. இதற்கு, ரசிகர்களின் விசுவாசமும் ஆதரவும் முக்கிய காரணம்” என்றார் விராத் கோலி. இதன்மூலம், அணி மாறுவது தொடர்பான வதந்தியை முடித்து வைத்துள்ளார் அவர்.