Random image

“தினகரனை நீக்குவேன்!”: சசிகலா ஆவேசம்! “எதிலிருந்து நீக்குவார்?”:: தினகரன் கிண்டல்!

நியூஸ்பாண்ட்:

நியூஸ்பாண்ட அனுப்பிய வாட்ஸ்அப் தகவல்:

சசிகலா குடும்பத்தில் குமைந்துகொண்டிருந்த உட்குடும்ப பூசல் வெடித்துக்கிளம்பியிருக்கிறது.

கடந்த முறை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டதே சசிகலாவுக்கு உடன்பாடு இல்லை. “நமது குடும்ப கட்டுப்பாட்டில்தான் அ.தி.மு.க. இருக்கிறது என்று பலரும் விமர்சிக்கிறார்கள். இந்த நிலையில் இடைத் தேர்தலில் நீ போட்டியிட வேண்டாம். வழக்கம் போல நமக்கு அனுசரணையானவர்கள் யாரையாவது நிறுத்தலாம்” என்றார் சசிகலா.

ஆனால் தினகரனோ, “வேறுயாரும் தேர்தலில் நிற்க விரும்பவில்லை. ஆகவேதான் நான்  போட்டியிட விரும்புகிறேன்” என்றார்.

சிறையில் இருந்த சசிகலாவும் அரைகுறை மனதோடு இதற்கு சம்மதித்தார். ஆனால் பிறகு, “டிடிவி தினகரன் சொன்னது உண்மையல்ல” என்பது அவருக்குத் தெரியவந்தது. போட்டியிட பலர் விரும்பியும்கூட, தினகரன்தான் அவர்களை கையமர்த்திவிட்டார் என்பது தெரியவந்தது.

இடையில் கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் சொல்லி பெயிலில் வந்த சசிகலா, சில பல ஆவணங்களில் இருந்த பிரச்சினைகளை தீர்த்ததோடு, இடைத்தேர்தல் விவகாரம் குறித்தும் தினகரனிடம் விசாரித்தார்.

“என்னிடம் பொய் சொல்லிவிட்டாய். இது நமக்கு நல்லதல்ல” என்று கடுமையாக எச்சரித்தார்.

இந்த நிலையில் இரண்டாம் முறை அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் வேட்புமனு தாக்கல் செய்தார் தினகரன். “வேண்டாம்… கட்சியும் நம் கையில் இல்லை… மத்திய மாநில அரசுகள் நமக்கு எதிராக இருக்கின்றன.. சிறிது காலம் அமைதி காப்போம்” என்று சசிகலா கூறியதை அவர் ஏற்கவில்லை.

இதிலிருந்தே சசிகலாவுக்கு தினகரன் மீது கடும் ஆத்திரம். அவருக்கு மட்டுமல்ல.. இளவரசி மற்றும் அவர்து வாரிசுகள் கிருஷ்ணப்பிரியா, விவேக் ஆகியோருக்கும் தினகரன் மீது கடும் வருத்தம் நிலவியது.

இந்த நிலையில்தான், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார்.

“வீடியோ வெளியிடப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்று தினகரன் கூறினார்.

அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை இது கிளப்பியது போலவே, சசிகலா குடும்பத்துக்குள்ளும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தினகரனுக்குத் தெரியாமல் வீடியோ வெளியிட்டிருக்க முடியாது என்று குடும்பத்தினர் நம்பினர்.

இதை இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் முகநூல் பதிவு வெளிப்படுத்தியது. “டி.டி.வி.யின் கீழ்த்தரமான செயல்” என்று ஆத்திரத்துடன் பதிவிட்டார் கிருஷ்ணப்பிரியா. பிறகு இந்த பதிவை, “டி.டி.வி. (?) உடனிருக்கும் கீழ்த்தரமான செயல்” என்று மாற்றி பதிவிட்டார்.

அதே போல, “டிடிவியிடம் கடந்த மார்ச் மாதம் அந்த வீடியோவை தினகரனிடம் அளித்தோம்” என்றார்.

இதற்கு தினகரன், “நான் கிருஷ்ணப்பிரியாவிடம் இருந்து அந்த வீடியோவை வாங்கவில்லை” என்றார் தினகரன்.

சிறிது நேரத்துக்கு முன் இதற்கு விளக்கம் அளித்த கிருஷ்ணப்பிரியா, “தினகரனிடம் நாங்கள் கொடுத்தோம் என்றுதான் கூறினேன். நான் கொடுத்ததாக கூறவில்லை. சசிகலா கேட்டுக்கொண்டதால் என் தம்பி விவேக், அந்த வீடியோவை தினகரனிடம் கொடுத்தார்” என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது தினகரன் மீது சசிகலா, இளவரசி, கிருஷ்ணப்பிரியா, விவேக் அனைவரும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.

சசிகலா – தினகரன்

“ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தில் அளிப்பதாகச் சொல்லி தினகரன் வீடியோவை வாங்கினார். ஆனால் அதை தனது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக்கொண்டார்.

இப்படி வீடியோவைவெளியிட்டதால் குடும்ப்ததுக்குத்தான் கெட்டபெயர். ஆனால் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தினகரன், சுயநலத்துடன் செயல்படுகிறார்” என்று வருத்தத்தில் இருக்கிறார்கள் அவர்கள்.

இந்த வீடியோ அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது என்றாலும் விவேக்கின் நிர்வாகத்தில் இருக்கும் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உச்சகட்ட ஆத்திரமடைந்த சசிகலா, “கட்சியின் பொதுச் செயலாளர் நான்தான். தினகரன் தொடர்ந்து துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தினகரனை நீக்குவேன் என்று சொல்லுங்கள்” என்று சிறையிலிருந்து சொல்லியனுப்பியிருக்கிறார்.

இது தினகரனிடம் சொல்லப்பட்டது.

ஆனால் தினகரன் இது குறித்து கவலைப்படவில்லை. “இப்போது கட்சியே நம்மிடம் இல்லை. இதில் பொதுச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளர் என்பதெல்லாம் கற்பனைதான். அப்படி நீக்கினால் நீக்கட்டும். அவரைத்தான் எல்லோரும் கிண்டல் செய்வார்கள்” என்று வழக்கமான புன்னகையோடு சொல்லி அனுப்பியிருக்கிறார்.