சிஏஏ மற்றும் என் ஆர் சி எவ்வாறு மேற்கு வங்கத்தில் அமலாக்கப்படும் என பார்க்கிறேன் : மம்தா சவால்

கொல்கத்தா

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை எவ்வாறு மேற்கு வங்கத்தில் அமலாக்கப்படும் என்பதைப் பார்க்கிறேன் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விட்டுள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நேற்று குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து கொல்கத்தாவில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பேரணி நடத்தினார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து, ஒரே வாரத்தில் 3வது நாளாக இன்றும் மம்தா பானர்ஜி பிரம்மாண்ட பேரணி நடத்தி வருகிறார். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டதால் கொல்கத்தா நகரம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, ”எக்காரணத்தைக் கொண்டும் குடியுரிமை சட்டத்தை மேற்குவங்கத்தில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். இதேபோன்று தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் மேற்குவங்கத்தில் இடமில்லை.

குடியுரிமை சட்ட விவகாரத்தில் மத்திய அரசு இப்போது பிறப்பு சான்றிதழைக் கேட்கத் தொடங்கியுள்ளது. குடியுரிமையை யாரும் இழக்க மாட்டார்கள் என்று மத்திய அரசு கூறுகிறது.  அதே வேளையில் இந்த விஷயத்தில் பான் கார்டு, ஆதார் போன்றவற்றைச் சான்றிதழாக ஏற்க முடியாது எனவும் மத்திய அரசு சொல்கிறது.

அவர்களுக்கு எதுதான் குடியுரிமையை நிரூபிக்க ஆதாரமாக வேண்டுமாம்? அமைச்சர் அமித் ஷா பாஜக தலைவர் மட்டுமல்ல. இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.  அமித் ஷாவின் பணி நாட்டில் வன்முறையைத் தூண்டி விடுவது அல்ல, நாட்டில் அமைதியை நிலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய பாஜக அரசுக்கு அனைவருக்குமான வளர்ச்சி என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தால், குடியுரிமை சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப்பெற வேண்டும். அப்படி இல்லையெனில், அவை எப்படி மேற்கு வங்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்பதைப் பார்க்கிறேன், என மம்தா சவால் விடுத்துள்ளார்.