அரசுக்கு எதிராக செயல்பட்டால் சுட்டு கொன்றுவிடுவேன்: சூரப்பாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்…

சென்னை: அரசுக்கு எதிராக செயல்பட்டால் சுட்டு கொன்றுவிடுவேன் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், மாநில அரசுக்கு எதிராக தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா.   அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் அவர் தன்னிச்சையாக மத்தியஅரசுக்கு கடிதம் எழுதியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகஅரசு கடும் கண்டனம் தெரிவித்தது. அதுபோல, அரியர் தேர்ச்சி விவகாரத்திலும் மாநில அரசின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில்,  சூரப்பாவுக்கு வீரப்பன் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை துணைவேந்தர் சூரப்பா திரும்பப் பெற வேண்டும் இல்லையேல், சுட்டுக்கொன்று விடுவேன் என்று எழுதப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சூரப்பா கொடுத்த புகாரின் பேரில் கடிதத்தை கைப்பற்றிய சென்னை கோட்டூர்புரம் காவல்துறையினர், அந்த கடிதம் எங்கிருந்தது அனுப்பப்பட்டு உள்ளது, அனுப்பியது யார் என்பது குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.