தனிக்கட்சித் தொடங்குவேன்! மு.க.அழகிரி அதிரடி
சென்னை: சென்னை வந்துள்ள மு.க.அழகிரி, கோபாலபுரம் சென்று தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், தனிக்கட்சித் தொடங்குது குறித்து ஜனவரி 3ந்தேதி ஆலோசனை செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் திமுக தென்மண்டல செயலாளராக இருந்த மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்து வருகிறார். அவ்வப்போது கட்சி தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், கடந்த மாதம், தன்னை பாஜகவுக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், கட்சியில் தனது மகனுக்கு உரிய பதவி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்த அழகிரி சட்டமன்ற தேர்தலில் தனது பங்கு இருக்கும் என அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று திடீரென சென்னை வந்துள்ள மு.க.அழகிரி, மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் சென்று, தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, தமிழக சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்து ஜனவரி 3ந் தேதி ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும், தனது ஆதரவாளர்களின் கருத்துக்களை பெற்ற பிறகே அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும் என்றவர், ஆதரவாளர்கள் தனிக்கட்சி தொடங்க வலியுறுத்தினால் நிச்சயம் தொடங்குவேன் என்றார்.
திமுகவில் மறுபடியும் சேரும்படி எனக்கு எந்த அழைப்பும் இல்லை என்று தெரிவித்ததுடன், நடிகர் ரஜினியை கண்டிப்பாக விரைவில் சந்தித்து பேசுவேன் என்றும் கூறினார்.