திமுக கூட்டணி வெற்றிக்காக பாடுபடுவேன்!: வைகோ

--

கூட்டணி குறித்த சர்ச்சை எழுந்த நிலையில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, “தி.மு.க. கூட்டண வெற்றிக்காக பாடுபடுவேன்” என்று அறிவித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் மதிமுக, காங்கிரஸ், வி.சி.க.கட்சிகள் உள்பட எந்த கட்சியும் இப்போதைக்கு இல்லை என்றும், தேர்தல் அறிவிப்புக்கு பின் தொகுதி உடன்பாட்டிற்கு பின்னரே கூட்டணி அமையும் என்றும் சமீபத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்தர். பிறகு, திமுகவுடன் உறவு நீடித்து வருவதாகவும், மதவாத சக்திகளுக்கு எதிரான கூட்டணி நிச்சயம் அமையும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனாலும் திமுக கூட்டணியில் விசிக இருப்பதாக திருமாவளவன் கூறவில்லை. அதேபோல் இந்த சந்திப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலினும் கூட்டணி குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை

இந்த நிலையில் திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கின்றோமா? இல்லையா? என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று வைகோ கூறினார். வைகோ இதனை தெரிவித்து இரண்டு நாட்கள் ஆகியும் ஸ்டாலினிடம் இருந்து எந்தவித பதிலும் வராத நிலையில் இன்று இருவரும் சந்தித்தனர். அப்போது தி.மு.க.  பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக உழைப்பேன்” என்று தெரிவித்தார்.

மேலும்,  “எழுவர்  விடுதலைக்காக நடத்தப்படும் போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அளிக்கும் ஆதரவே கூட்டணிக்கான விளக்கமும் கூட” என்று தெரிவித்தார்.