“அந்த ரகசியத்தை மட்டும் ஓய்வுபெறும் வரை வெளியிடமாட்டேன்”

சென்னை: ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் குறைந்தபட்சம் அரையிறுதிப் போட்டிவரை சென்னை அணியை முன்னேற்றும் ரகசியத்தை வெளியிட்டால், தன்னை அணி நிர்வாகம் அடுத்தமுறை ஏலத்தில் எடுக்காது என்று சுவைபட கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி.

மொத்தம் 3 முறை ஐபிஎல் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ள தோனி தலைமையிலான சென்னை அணி, தான் பங்கேற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களிலும், குறைந்தபட்சம் அரையிறுதி வரை முன்னேறி அசத்தியுள்ளது. இது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

அதிக வெற்றிகளின் மூலம், இந்த முறையும், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

எனவே, இதன் ரகசியம் என்ன என்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, “அதை நான் வெளியிட்டால், அடுத்தமுறை சென்னை அணி நிர்வாகம் என்னை ஏலத்தில் எடுக்காது.

இது ஒரு வியாபார ரகசியம். ரசிகர்களின் ஆதரவும், உரிமையாளர்களின் ஆதரவும் மிக முக்கியமானது. மேலும், அணியின் நிர்வாகிகளும் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். இதுதவிர, நீங்கள் கேட்ட ரகசியத்தை, ஓய்வுபெறும் வரை வெளியிட மாட்டேன்” என்று சுவைபட தெரிவித்தார்.

– மதுரை மாயாண்டி