கோலாலம்பூர்

காஷ்மீர் விவகாரத்தில் தாம் தெரிவித்த கருத்தைத் திரும்பப் பெற முடியாது என மலேசிய முதல்வர் மகாதிர் முகமது கூறி உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் விதி எண் 370 விலக்கப்பட்டு அம்மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி ரத்து செய்தது.   அத்துடன் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.   மாநிலத்தில் கலவரத்தை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப் பட்டன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் காஷ்மீரைக் கைப்பற்ற நினைத்த பாகிஸ்தான் அரசுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது.   காஷ்மீர் மாநிலத்தில் மக்களின் விருப்பத்தை மீறி அடக்குமுறை உள்ளதாகவும்  மனித உரிமை மீறல் பெருமளவில் நடப்பதாகவும் பாகிஸ்தான் புகார் அளித்தது.

ஐநா பொதுக் குழுவில் பேசிய மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது காஷ்மீர் பகுதியின் மீது இந்தியா படை எடுத்து ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்த கருத்து இந்தியாவில் கடும் சர்ச்சையை உண்டாக்கியது.     இதையொட்டி மலேசிய நாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதியை முழுவதுமாக நிறுத்த உள்ளதாக இந்திய எண்ணெய் வர்த்தகர் சங்கம் அறிவித்தது.

இந்தியா பெருமளவில் மலேசிய நாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்து வருகிறது.   இந்திய வர்த்தகர்களின் இந்த அறிவிப்பினால் மலேசியாவின் வர்த்தகம் கடும் பாதிப்பு அடையும் எனக் கூறப்படுகிறது.   இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி நாடுகளில் மலேசியா மூன்றாம் இடத்தில் உள்ளது.   வர்த்தகர்களின் அறிவிப்பினால் மலேசியாவுக்கு 13 லட்சம் கோடி டாலர் வர்த்தக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது, செய்தியாளர்களிடம் ”காஷ்மீர் விவகாரத்தில் எனது மனதில் இருப்பதை நான் தெரிவித்துள்ளேன்.  எனது கருத்தை திரும்பப் பெற மாட்டேன்.   மாற்றிக் கொள்ளவும் மாட்டேன். அனைவரும் ஐநா சபைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பது விதியாகும்.   அப்படி இல்லையெனில் ஐநா சபை இருந்தும் பயனில்லை..

இதற்காக இந்திய வர்த்தகர்கள் மலேசிய பாமாயிலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்ததை நானும் அறிவேன்.  இதனால் மலேசியாவுக்கு ஏற்பட உள்ள பாதிப்பு குறித்து நான் ஆய்வு செய்து வருகிறேன்.   விரைவில் இதற்கான தீர்வு எட்டப்படும் என நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.