நான் பாஜக ஆட்சியில் தான் அதிகம் பணி புரிந்தேன் : நிர்மலாவுக்கு ரகுராம் ராஜன் பதில்

டில்லி

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தாம் அதிக காலம் பாஜக ஆட்சியில் பணி புரிந்ததாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் வருடம் செப்டம்பர் முதல் 2016 ஆம் வருடம் செப்டம்பர் வரை  ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் பணி புரிந்தார்.    அவர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்துள்ளார்.    அவரை அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்த போதிலும் அவர் அரசியலில் நுழைய விருப்பம் இல்லை என்னும் கருத்துடன் உள்ளார்.

சமீபத்தில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பேசிய ரகுராம் ராஜன் மோடி முதல் முறை ஆட்சி செய்த போது அரசின் பொருளாதார மேம்படு குறித்த நடவடிக்கைகள் சரியாக இல்லை எனத் தெரிவித்தார். இதற்கு முக்கிய காரணம் அரசு முழுக்க முழுக்க தலைமையை மையப்படுத்தி இருந்தததும் அரசுத் தலைமைக்குப் பொருளாதார வளர்ச்சி குறித்த ஒரு சரியான பார்வை இல்லாததும் என குறிப்பிட்டார்.

இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ரகுராம் ராஜன் ஒரு பெரிய அறிவாளி என்பதால் அவர் மீது நான் மிகவும் மரியாதை வைத்துள்ளேன்.   அவருக்கு நான் பதில் அளிக்க விரும்புகிறேன்.   அவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த போது தான் இந்தியப் பொருளாதாரம் சீர் குலையத் தொடங்கியது.   அவருடைய காலத்தில் தொலைப்பேசி மூலம் பல பெரிய தொழிலதிபர்களுக்குக் கடன் அளிக்க வங்கிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த சிபாரிசை அரசியல் தலைவர்கள் செய்ய ரகுராம் ராஜன் அனுமதி அளித்துள்ளார்.   இன்று வரை அதன் பாதிப்பிலிருந்து வங்கிகள் மீள முடியாமலுள்ளன.  பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ரகுராம் ராஜனின் நடவடிக்கைகளால் பொதுத் துறை வங்கிகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன.” எனத் தெரிவித்தார்.

இதற்கு ரகுராம் ராஜன், “முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நான் ரிசர்வ் வங்கி ஆளுநராக எட்டு மாதங்கள் மட்டுமே பணி புரிந்துள்ளேன்.  மீதமுள்ள 26 மாதங்கள் நான் பாஜக ஆட்சியில் பணி புரிந்துள்ளேன்.   பாஜக ஆட்சியில்தான் நான் அதிக காலம் ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பணி புரிந்துள்ளேன்.” எனப் பதில் அளித்துள்ளார்.