லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயான் போத்தம், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.

தற்போது 64 வயதாகும் இயான் போத்தம், இங்கிலாந்து கிரிக்கெட்டின் பெயர் பெற்ற ஆல்ரவுண்டராக இருந்தார். கடந்த 1977 முதல் 1992 வரை 102 டெஸ்ட் போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார்.

இவருக்கு, ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு நைட்ஹூட் கவுரவம் அளிக்கப்பட்டது. இவர், பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் பிரெக்ஸிட்டை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது இவருக்கு நாடாளுமன்ற நியமன உறுப்பினர் என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. மொத்தம் 36 பேர்களில் இவரும் ஒருவர். இங்கிலாந்தின் நாடாளுமன்ற மேலவை, ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

2011ம் ஆண்டு இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ரசேல் ஹெய்ஹூ பிளிண்ட் என்பவர் உறுப்பினராக்கப்பட்டார். அதன்பிறகு, தற்போது இயன் போத்தம் நாடாளுமன்ற உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.

டேவிட் ஷெப்பர்ட், காலின் கவுட்ரி, லியரி கான்ஸ்டன்டைன் ஆகியோருக்கும் இதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.