இந்திய அணியில் அந்த இருவர் இருந்தால் நல்லதாம்! – இயான் சேப்பல் கூறுவது யாரை?

மெல்போர்ன்: பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்காக, ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ள இந்திய அணிக்கு, ஹர்திக் பாண்ட்யாவும், குல்தீப் யாதவும் அவசியம் தேவையானவர்கள் என்றுள்ளார் இயான் சேப்பல்.

இந்த இயான் சேப்பல் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனும், இந்நாள் புகழ்பெற்ற வர்ணனையாளருமாவார்.

இந்தாண்டின் இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த டெஸ்ட் தொடர் குறித்து இயான் சேப்பல் கூறியுள்ளதாவது, “டேவிட் வார்னருடன் களமிறங்கக்கூடிய மற்றொரு தொடக்க வீரர் சற்று பலவீனமானவர் என்பதால், அவரை விரைவில் காலிசெய்வது குறித்து இந்திய அணி கவனம் செலுத்தலாம். ஆனால், அவர்களின் பெரிய கவனம், வார்னர், ஸ்மித் மற்றும் லபுஷேன் ஆகியோர் மீதுதான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இந்திய அணி, தன்னளவில் வலுவாக களமிறங்கும் என்றே எதிர்பார்க்கலாம். அந்த அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்றால், முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு சற்று ஓய்வு கொடுக்கலாம்.

இதன்மூலம் பாண்ட்யா தன்னை தயார்படுத்திக்கொண்டு, மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் எனும் நிலைக்கு வரும்போது, இந்திய அணியில் இரண்டாவது ஸ்பின்னர் ஒருவருக்கு இடமிருக்கும்.

அதேசமயம், இந்திய அணியில் எந்த ஸ்பின்னரை தேர்வுசெய்யலாம் என்பதில் அதிக குழப்பம் இருக்க வாய்ப்புள்ளது. அஸ்வினின் பந்துவீச்சு ஆஸ்திரேலியாவில் எடுபடவில்லை. அதேசமயம், சிறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா, அணியில் இடம்பெறும் வாய்ப்புகள் அதிகம்.

குல்தீப் யாதவின் ரிஸ்ட் ஸ்பின் பந்துவீச்சு, ஆஸ்திரேலிய பிட்ச்சுகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் வல்லமைக் கொண்டது. எனவே, அவர் அணியில் இருப்பது நல்லது. அதேசமயம் அவரின் தேர்வும் எளிதான ஒன்றாக இருக்காது.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு கோலி, புஜாராவை மீறி, வேறு சவால்களும் காத்திருக்கின்றன” என்றுள்ளார் இயான் சேப்பல்.