இங்கிலாந்து பேட்ஸ்மென்களின் திறமையின்மையை தோலுரிக்கும் இயான் சேப்பல்!

சிட்னி: சுழற்பந்து வீச்சை ஆடுவதில், இங்கிலாந்து பேட்ஸ்மென்களின் திறமையின்மையை விரிவான வகையில் கேலி செய்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல்.

அவர் கூறியுள்ளதாவது, “அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டி வித்தியாசமாக இருந்தது என்று விராத் கோலி தெரிவித்தார். சென்னை ஆடுகளத்திலேயே இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் திறமையை அறிந்துகொண்டுதான் அகமதாபாத்துக்கு 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது.

சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் விளையாட முடியாது. அந்தத் திறமை இல்லை என்பதை இந்திய வீரர்கள் சரியாகக் கணித்தனர்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் பலவீனத்தைச் சரியாகக் கணித்து, செயல்பட்டு, இங்கிலாந்து அணிக்கு பெரும் மன உளைச்சலான முடிவை அளித்துள்ளது. சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மோசமான பேட்டிங்கை இங்கிலாந்து வீரர்கள் வெளிப்படுத்தினார்கள்.

பந்தைத் தடுத்து ஆடும் அவர்களின் டிபென்ஸ் மீதே இங்கிலாந்து வீரர்களுக்கு நம்பிக்கையில்லை. இந்திய வீரர்களின் பந்துவீச்சை அடித்து விளையாட நினைத்து விக்கெட்டை இழந்துவிட்டார்கள்.

இங்கிலாந்து வீரர்களுக்குத் தெரிந்த ஷாட் எல்லாமே, ரிவர்ஸ் ஸ்வீப்பில் விளையாடுவது, அல்லது கிரீஸை விட்டு இறங்கிவந்து அடித்து பந்துவீச்சாளர்களின் லென்த்தை மாற்றி விளையாடுவது, இதைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.

அதிலும் ஜானி பேர்ஸ்டோவுக்கு அக்ஸர் படேல் வீசிய பந்து நேராக ஸ்டெம்ப்பை நோக்கி வந்தது. அந்தப் பந்தை ஆடத் தெரியாமல் விக்கெட்டை இழந்தார்.

சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் கால்களை நகர்த்தி ஆடுவது பந்துவீச்சைச் சமாளித்து ஆடுவது மட்டுமல்லாமல், அவரால் எங்கு வேண்டுமானாலும் பந்தையும் அடிக்க முடியும். ஆதலால், சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஃபுட்வொர்க் பேட்ஸ்மேன்களுக்கு முக்கியம். இந்த ஃபுட் வொர்க் என்பது இளமைக் காலத்தில் இருந்தே, கிரிக்கெட் விளையாடும்போதிலிருந்தே வர வேண்டும்.

ஆனால், இதில் கேள்வி என்னவென்றால், இங்கிலாந்து மண்ணில் இந்த ஃபுட் வொர்க் ஏன் பரவலாகக் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஸ்வீப் ஷாட் அடிப்பது என்று தவறாகக் கற்பிக்கப்படுகிறது.

இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஒலே போப், இந்தியச் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகக் கால்களை நகர்த்தி விளையாட முயன்றார், அது சரியான முடிவுதான். ஆனால், தவறாகச் செயல்படுத்தப்பட்டுவிட்டது.

ஒலே போப், கிரீஸிலிருந்து மெல்லக் கால்களை நகற்றுவதற்கு முன்பே, முதலிலேயே கிரீஸிலிருந்து குதித்துவிட்டார். 2-வதாக, போப், தனது கால்களை முன் நகர்த்தினாலும், அவரின் பின்னால் சரியாக அமையாமல், கிரீஸைத் தேடியது. ஸ்டெம்பிங் ஆகிவிடுவோம் என அச்சத்தில் இருந்தார்.

நான் சிறுவயதில் இருந்தபோது, ஃபுட் வொர்க் குறித்து எனக்கு இரு விஷயங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. முதலாவதாக 3 அடி தொலைவில்தான் ஸ்டெம்பிங் ஆக வேண்டும், 3 இன்ச்சில் அல்ல. 2-வதாக கிரீஸை விட்டு வெளியேற இறங்கிவிட்டால், விக்கெட் கீப்பரை பற்றி ஒருபோதும் சிந்திக்கக்கூடாது” என்று விரிவாக விமர்சித்துள்ளார் இயான் சேப்பல்.