மோடி தலைமை மீது அதிருப்தி: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் அச்சம்…..

டெல்லி:

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளால், நாடு முழுவதும் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ்  அதிகாரிகள் அச்சமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் தங்களது அச்சம் குறித்து, வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் பதவி ஏற்றதும், மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றி, மக்களிடையே அச்சத்தையும், பாகுபாட்டையும் ஊக்குவித்து வருகிறது.  சமீப காலமாக நிறைவேற்றப் பட்டுள்ள காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக், என்ஆர்சி, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டங்களால் மக்களிடையே மத்திய பாஜக அரசு மீது கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது.

இது மட்டுமின்றி, நிர்வாக திறமையற்ற அரசினால், நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்து, வேலை யில்லாத் திண்டாட்டமும்  அதிகரித்துள்ளது. சிறுகுரு தொழில்கள் அடியோடு அழிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆலோசனை கூறும் பொருளாதார வல்லுனர்களின் கருத்துக்கு செவிமடுக்க மோடி அரசு மறுத்து வருவதால், பல்வேறு பொருளாதார வல்லுநர்கள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

அதுபோல, ஊழலில் ஈடுபடும் ஊழியர்களையும், திறமையற்ற பணியாளர்களையும் பணி நீக்கம் செய்வதாக கூறி, அரசின் திட்டங்கள் குறித்து விமர்சிக்கும் உயர் அதிகாரிகளை  மத்திய அரசு திட்டமிட்டு  பணி நீக்கம் செய்து வருகிறது.

மோடி அரசின் இதுபோன்ற செயல்கள், நாடு முழுவதும் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளிடையே கடுமையான அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது, அவர்களது சமூக வலைதள பகிர்வு மூலம் தெரிய வந்துள்ளது.

மத்தியஅரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால், தங்களுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர். மூத்த அதிகாரிகளை வேட்டையாடுவது, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நாட்டின் அரசியலமைப்பு நெறிமுறைகளை மாற்றுவதற்கான முயற்சிகள்  போன்றவற்றால், அரசு ஊழியர்கள் மத்தியில் ஒருவித அமைதியின்மையைத் தூண்டி இருப்பதாகவும், இதுகுறித்து,, அவர்கள் தங்கள் கவலைகளையும் குறைகளையும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர்.

அரசாங்கக் கொள்கைகளை ஆதரிக்கும் பல அதிகாரிகள் டிவிட்டர் மற்றும் பேஸ்புல்,  தங்கள் உரிமையை அரசாங்கத்திற்கு ஆதரவாக தெரிவித்து வரும் நிலையில்,  விமர்சனம்  அல்லது சந்தேகம் உள்ளவர்கள் தங்கள் அச்சங்களை வெளிப்படுத்த மூடிய வாட்ஸ்அப் குழுக்களையே உபயோகப்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப் குழுவில், தனது மனச்சுமையை பகிர்ந்துள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், “நம்மை நாமே முட்டாளாக்க வேண்டாம். நமக்கு இந்த அரசால் எந்த பாதுகாப்பும் இல்லை – நாட்டின் அரசியலமைப்புக்குகூட்  பாதுகாப் இல்லை. இது ஒரு மாஸ்டர்-ஸ்லேவ் உறவு ” என்று தெரிவித்து உள்ளார்.

அதுபோல, மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி, ஜேர்மன் லூத்தரன் ஆயர் மார்ட்டின் நீமல்லரின் உன்னதமான கவிதையின் வரிகளை பதிவிட்டு, தங்களது ஆதங்கத்தை  வெளிப்படுத்தி  அவரது குமுறல், அரசியலமைப்பு மற்றும்  நாட்டின் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அடித்தளத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

ஏற்கனவே, பொதுத்தேர்தல் நேரத்தில் நடைபெற்ற நேரத்தில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மீதான தேர்தல் விதிமீறல் புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையர்களுக்குள் மோதல் ஏற்பட்டதும், அவரது கருத்து புறக்கணிக்கப்பட்டதும் சர்ச்சையான நிலையில், தேர்தல் ஆணையர் (அசோக் லாவாசா) மத்தியஅரசால் குறி வைக்கப்பட்டிருப்பதையும் சில அதிகாரிகள் மறைமுகமாக எடுத்துரைத்து… அடுத்து நம்மவர்களில் யாராவது இருக்கலாம் என்றும் அச்சத்துடன் செய்திகளை பகிர்ந்து உள்ளனர்.

உயர்அதிகாரிகள் அதிருப்தியை மத்தியஅரசு கண்காணித்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடையே வளர்ந்து வரும் பாதுகாப்பின்மை உணர்வு குறித்தும், யாராவது காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக  இருக்கிறார்களா என்பது குறித்தும் கண்காணித்து, அவர்கள்மீது புலனாய்வு அமைப்புகளை கட்டவிழ்த்து விடுகிறது என்றும் தகவல்கள் பகிரப்பட்டு உள்ளது.

இதற்கு உதாரணமாக,  இந்த ஆண்டின் தொடக்கத்தில், முன்னாள் என்ஐடிஐ ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி சிதுன்ஷ்ரீ குல்லர் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர்கள், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர், இதில் முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.  இதுபோன்ற செயல்கள், திறமையான மற்றும் நேர்மையான அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.

அதே நேரத்தில், சிபிஐ மற்றும் அமலாக்கத்தறை போன்ற ஏஜென்சிகள் தேர்தல் ஆணையர் அசோக் லாவாசாவின் குடும்பத்தை விசாரித்து வருகிறது. அதுபோல, முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் கார்க் அல்லது முன்னாள் மனிதவள மேம்பாட்டு செயலாளர்கள் ஆர். சுப்ரமண்யம் மற்றும் ரினா ரே போன்ற பல செயலாளர்கள் மாற்றப்பட்டனர்.

இதுபோன்ற செயல்களை சுட்டிக்காட்டும் பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த உயர் அதிகாரி ஒருவர்,  “இதுபோன்ற இடுகைகளை நான் குழுக்களில் பகிரும்போது, ​​சில அதிகாரிகள் என்னுடன் உடன்படுகிறார்கள் என்றும், சிலர் தனிப்பட்ட முறையில் எனக்கு செய்திகளை அனுப்புகிறார்கள், சில சமயங்களில் அவர்கள் என்னை எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார்கள்,” என்றும் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும்,  அனைத்து அதிகாரிகளும் தங்கள் கருத்துக்களை வாட்ஸ்அப் குழுக்களில் வெளியிடத் தயாராக விரும்பாத நிலையிலும், சில அதிகாரிகள் தங்களுக்கு  ஆதரவை அளிப்பவர்களுக்கு மட்டுமே, தனிப்பட்ட செய்திகளை அனுப்புகிறார்கள் என்றும் மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்துஉள்ளார்.

இதுபோன்ற பகிர்வுகளுக்கு offline whatsapp பகிர்வே சரியானது என்றும் கூறும் அதிகாரிகள், மூடிய வாட்ஸ்அப் குழுக்களே  “பாதுகாப்பான இடம் என்றும், அரசு மீதான விமர்சனங்களை,  மக்கள் பகிர்ந்துகொள்கிறார்கள், ஏனென்றால் மக்கள் உண்மையிலேயே அவர்கள்  அக்கறை கொண்டுள்ளனர் …ஆனால் நாங்கள் அவ்வாறு செயல்பட முடியாது என்றும்,  முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள் எப்போதும் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்ப்பதாகவும்  அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மோடி அரசின் இதுபோன்ற வழக்குகள், அச்சுறுத்தல் காரணமாக, அதிகாரிகளை நடுங்க வைக்கிறது என்று தெரிவித்துள்ள உயர்அதிகாரி,  இதன் காரணமாக மத்திய அரசுக்கு  பின்னடைவே  ஏற்படும் என்றும் எச்சரித்து உள்ளனர்.