மக்களின் பணத்தை எடுத்து யெஸ் வங்கிக்கு உதவும் ஸ்டேட் வங்கி : ஐஏஎஸ் அதிகாரி கண்டனம்

டில்லி

யெஸ் வங்கிக்கு உதவ பொதுமக்கள் பணத்தை ஸ்டேட் வங்கி அளிப்பதாக ஐஏஎஸ் அதிகாரி அசோக் கேம்கா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் யெஸ் வங்கியின் நிதிநிலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் ரிச்ர்வ் வங்கி அதன் நிற்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இயக்குநர்கள் குழுவைக் கலைத்தது.   அத்துடன் வாடிக்கையாளர்கள் வரும் 4 ஆம் தேதி வரை ரூ.50000 மட்டுமே எடுக்க முடியும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  இந்த கட்டுப்பாடுகளால் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த  இந்தியப் பங்குச் சந்தை மேலும் வீழ்ச்சி அடைந்தது.

இந்நிலையில் யெஸ் வங்கியின் 49% பங்குகளை விலைக்கு வாங்கும் பாரத ஸ்டேட் வங்கி ரூ.10000 கோடியை யெஸ் வங்கியில் முதலீடு செய்ய உள்ளதாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.  இதன் மூலம் யெஸ் வங்கியின் நிதிநிலை சீரடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இது குறித்து பொதுமக்களின் யோசனை நேற்று கோரப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி அசோக் கேம்கா இது குறித்து பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ச்க்திகாந்த தாஸ் ஆகியோருக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில் கேம்கா, “யெஸ் வங்கியின் தற்போதைய நிதிநிலை நெருக்கடிக்குக் காரணம் வங்கியில் நடந்துள்ள ஊழல் ஆகும்.  யெஸ் வங்கி, ஐஎல் அண்ட் எஃப்எஸ், டி எச் எஃப் எல், பிஎம்சி ஆகிய அனைத்து நிதி நிறுவனங்களும் நிதிநிலை நெருக்கடியில் சிக்கி உள்ளன.

இவை அனைத்தும் இந்த நிறுவன இயக்குநர்களின் தவறான அணுகுமுறை, சரியான நிர்வாகமின்மை, மற்றும் கட்டுப்படுத்த வேண்டியவர்களின் கவனக் குறைவு ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது.  அது மட்டுமின்றி தணிக்கையாளர்கள், கடன் குறித்த ஆய்வாளர்கள், நிர்வாகிகள், உள்ளிட்ட பல அதிகார மட்டத்தில் மெத்தனப் போக்கினாலும் இந்த இழப்பு உண்டாகி இருக்கிறது.

இதற்காக இந்த நிறுவனத்தின் தணிக்கையாளர்கள், கடன் ஆய்வாளர்கள், மற்றும் நிர்வாகிகள் ஆகியோரின் அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.  அதை விடுத்து ஸ்டேட் வங்கி மூலம் யெஸ் வங்கிக்கும் இந்த கடன் தொலையைச் சமாளிக்கப் பொதுமக்கள் பணத்தை உதவித் தொகையாக அளிப்பது நியாயமற்ற செயல் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்

அசோக் கேம்கா கடந்த 27  வருடங்களில் 52 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.